உங்கள் வாக்கு யாருக்கு என்பதை உணர்வால் முடிவு செய்தீர்களா அல்லது அறிவால் முடிவு செய்தீர்களா, உணர்வின் மிகையால் நாம் எடுக்கும் முடிவுகள் நிகழ்காலத்தில் நன்மையாக தெரிவதால் சரியாகத் தோன்றும். அறிவின்மிகையால் நாம் எடுக்கும் முடிவுகள் நிகழ்காலத்தில் தவறாக மற்றவர்களுக்கு தெரிந்தாலும் வருங்காலத்தில் அதுவே நன்மையாக இருக்கும்.
சுதந்திரம் பெற்ற உடனே ஜனநாயகம் மலர்ந்தது,
ஜனநாயகத்தால் சமூக நீதி கிடைத்தது,
சமூகநீதியால் குலத்தொழில் ஒழிக்கப்பட்டது,
குலத்தொழில் ஒழிக்கப்பட்டதால் அனைவரும் சமம் என்ற நீதி அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது.
இந்த நிலைக்கு மனித சமுதாயம் உயர பல உயிர்களை இழந்து பல ஆயிரம் ஆண்டுகள் பிடித்துள்ளது.
நாமும் நம் சந்ததிகளும் பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி சென்று சாதி, மதக் கலவரங்களால் பல கொடுமைகளை அனுபவிக்காமல் இருக்கவேண்டுமென்றால் “நாம் அனைவரும் சமம் “என்ற நீதி நிலைத்திருக்க வேண்டும்.
அரசியலை சிந்திக்கும் திறன் இல்லாத பாமர மக்களின் உணர்வை தூண்டுவதற்காக தான் சாதி, மதப் பிரிவினை வாதிகள் நிகழ்கால சுயநலத்துக்காக மக்களிடம் சாதி,மத பிரிவினையை ஏற்படுத்தி பலனை அடைய முயற்சிக்கின்றார்கள்.
சாதி, மதம் சார்ந்த எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் அது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்தாலும் அதை நடைமுறைப் படுத்தும் திறன் நீதித்துறைக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் இல்லாததால் மக்களே நீதிபதியாக இருந்து சாதி, மதம் சார்ந்த அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்காமல் இருந்தால், நாட்டில் ஜனநாயகமும் அமைதியும் நிலைத்திருக்கும்.
உங்கள் தொகுதியில் அதிமுக, திமுக கூட்டணியில் உள்ள சாதி கட்சியோ, அல்லது மத கட்சியோ (எந்த சாதியாக இருந்தாலும் சரி எந்த மதமாக இருந்தாலும் சரி )போட்டியிட்டால்,எதிர்க்கட்சிக்கு வாக்கு போட உங்களுக்கு விருப்பமில்லையென்றால். NOTA வுக்கு உங்கள் வாக்கை போடுங்கள், அப்போதுதான் வரும் காலத்தில் அதிமுக, திமுக கட்சிகள் சாதி, மத கட்சி களுடன் கூட்டணி வைக்காமல் தனிமைப்படுத்தும்.
உணர்வின் ஆளுமையிலிருந்து விடுபட்டு அறிவின் ஆளுமையால் சிந்தித்து சாதி, மத பிரிவினை கட்சிகளுக்கு வாக்களிக்காமல் இருந்தால்தான் வரும் காலத்தில் நமக்கும் நம் சந்ததிகளுக்கும் நன்மை.
நம் சாதியினரும், மதத்தினரும் தான் பெரும்பான்மையினர் என்ற துணிவில் நாட்டில் சாதி, மத வெறுப்பு உணர்வை ஏற்படுத்தினால் நாம் வைத்த நெருப்பில் நாமே கருக வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும். நாடே எரியும் போது நம் வீடு மட்டும் எப்படி பாதுகாப்பாக இருக்கும், சாதி, மத கலவரம் என்பது காட்டுத் தீ போன்றது அனணப்பதற்கு முன் காடு முழுவதும் எரிந்துவிடும்.
சாதி,மத பிரிவினைக்கு துணை போகாமல் ஜனநாயகத்தை காத்திடுவோம் !
நம் சுயநலத்திற்காக !