29 July 2019
by
Vijayakumaran
மலை உச்சியில் கடவுள் தெரிகிறார் என்று எல்லோரும் சொல்லும் பொழுது, நமக்கு மட்டும் தெரியவில்லை என்றால் அசிங்கம். அது போல் தான் இன்றைய ஊடகங்களும், மக்கள் எவ்வழியோ அவ்வழியே அவர்களுடையதும். மக்கள் நஞ்சை விரும்பினாலும் அதையும் கொடுக்க தயங்க மாட்டார்கள், காரணம் ஊடகங்களுக்கு இது வியாபாரம்.
கர்நாடகாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம் எல் ஏக்கள் இந்த சட்டமன்ற காலம் முடியும் வரையில் தேர்தலில் போட்டியிட தடை விதித்து சபாநாயகர் உத்தரவு இட்டதை தவறு, இவருக்கு இந்த உரிமை இல்லை என்று ஒரு வழக்கறிஞர் சொல்வதை தொலைக்காட்சியில் வெளியிடும் இந்த ஊடகங்கள், குற்றவாளி தேர்தலில் நிற்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவையும், நாடாளுமன்ற இட ஒதுக்கீடு சட்ட மசோதாவையும் எதிர்த்து ஏன் கருத்து தெரிவிக்கவில்லை, ஏன் மக்களிடம் ஜனநாயகத்தின் வலிமையையும், உரிமையையும், தெளிவுபடுத்தவில்லை ?
ஜனநாயகத்தில் மக்கள் மன்றத்தை (தேர்தல் முடிவை)கட்டுப்படுத்தக்கூடிய வலிமை பாராளுமன்றத்திற்கோ,சட்டமன்றத்திற்கோ,அல்லது நீதிமன்றத்துக்கோ இல்லை என்பதை ஒவ்வொரு குடி மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இட ஒதுக்கீடு மூலம் எந்த தொகுதியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை அரசு முடிவு செய்த பிறகு அவர்களில் ஒருவரை தான் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மக்களின் ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே, மக்களின் ஜனநாயக உரிமைக்கு எதிராக சட்டம் இயற்றுவது ஜனநாயகம் அல்ல.
குற்றவாளிக்கு அவர் செய்த குற்றத்திற்கு தண்டனை கொடுக்க நீதி அரசர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் அவர் மக்கள் மன்றம் செல்ல (தேர்தலில் போட்டியிட )தடை விதிக்க நீதிஅரசர்களுக்கு உரிமை இல்லை.
மக்கள் அறிவு இல்லாதவர்கள் எனவே குற்றவாளியை தேர்ந்தெடுத்து விடுவார்கள் என்று நீதிபதி நினைப்பதன் வெளிப்பாடுதான் அவரின் ஆணைக்கு காரணம். அது போல் மக்கள் அறிவு இல்லாதவர்கள்,சாதிவெறியர்கள், மதவெறியர்கள், பெண்களுக்கு சம உரிமையை கொடுக்காதவர்கள், என்று இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே நினைப்பதன் வெளிப்பாடுதான் தேர்தலில் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு மான இட ஒதுக்கீடு.
அறிவு இல்லாத மக்களாலும், சாதி, மத, வெறியர்களாலும், பெண்களுக்கு சம உரிமை கொடுக்காதவரகளாலும்,அடிமைப் பெண்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள், எப்படி அறிவாளியாகவும், சாதி மத ஒற்றுமையை பாதுகாக்கும் மற்றும் பெண் உரிமைகளை பாதுகாக்ககூடியவர்களாகவும் இருக்க முடியும்?எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எந்த ஒரு சட்டத்தின் மூலமும் மக்களின் ஜனநாயக உரிமையை தடைசெய்ய முடியாது.
சான்றோர்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை மக்களிடம் பெரியாரைப் போல் விழிப்புணர்வை ஏற்படுத்தி சரியானவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கும் அறிவை மக்களுக்கு கொடுப்பதே ஜனநாயகம்.
மாறாக மக்களுக்கு அறிவு இல்லை என்று எண்ணி அவர்களின் ஜனநாயக உரிமையை பறிப்பதென்பது சர்வாதிகாரம்.
இவை பல்லாயிரம் சட்ட வல்லுனர்களுக்கு தெரிந்தும் ஏன் அவர்கள் குரல் கொடுக்கவில்லை ?இட ஒதுக்கீடு ஜனநாயகம் என்றால் ஏன் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்ய இவர்கள் குரல் கொடுக்கவில்லை ?
தனி ஒரு மனிதனை (நீதிபதி )அறிவாளி, நேர்மையானவர் என்று 120 கோடி மக்கள் நம்பவேண்டும், ஆனால் 120 கோடி மக்களின் அறிவையும், நேர்மையையும் ஒரு நீதிபதி நம்பமாட்டார், இதுதான் இந்திய திரு நாட்டின் ஜனநாயகம்.
இதை மக்களிடம் கொண்டு செல்லாமல் காப்போம் ஜனநாயகத்தை !
வாழ்க உளுத்துப்போன ஊடகத் தூண்கள்!
in Politics