23 December 2019
by
Vijayakumaran
உயிரினங்களாக இருந்தாலும் அல்லது கொள்கை சார்ந்த இயக்கமாக இருந்தாலும் காலத்தின் சூழலுக்கு ஏற்ப பரிணாம மாற்றம் அடையவில்லை என்றால் அது அழிந்துவிடும் என்பது இயற்கையின் விதி. இதற்கு கட்டுப்பட்டு தான் உலகில் அனைத்தும் இயங்குகின்றது.
70 ஆண்டுகளுக்கு முன் திராவிட கழகம் வளர்ச்சி அடையும்போது படித்தவர்களும். கடவுள் மறுப்பாளர்களும் அதிகம் இருந்ததால்தான் தி க வின் கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் தற்போது பகுத்தறிவு இல்லாதவர்களும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் அதிகமாக இருப்பதால்தான் திராவிட கழகம் மக்களிடம் செல்வாக்கை இழந்து வருகின்றது என்று எடுத்துக்கொள்ள முடியாது..காரணம் 70 ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர்களை விட தற்பொழுது வாழ்பவர்கள் அனைவரும் படித்தவர்களாக உள்ளனர்.
70 ஆண்டுக்கு முன் பெரியாரின் பகுத்தறிவு சிந்தனை மற்றும் கடவுள் மறுப்புக் கொள்கையின் ஈர்ப்பால் மக்கள் பெரியாரின் பின் அணிதிரண்டு செல்லவில்லை. சாதியால், பொருளாதாரத்தால், கல்வியால், கடவுளால், மூடநம்பிக்கையால், அடிமைப்பட்டு இருந்த பெரும்பான்மை மக்களின் சமத்துவத்தின் போராளியாக பெரியாரை மக்கள் பார்த்தார்கள், அதனால் தான் திராவிட கழகம் மிகப்பெரிய செல்வாக்கை பெற்றது.
பெரியாரின் உழைப்பால், விழிப்புணர்வால், போராட்டத்தால், சாதியால் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், கோவில்களில், புறக்கணிக்கப்பட்ட மக்கள் இன்று சமத்துவத்தை பெற்றுவிட்டதால் திராவிட கழகத்தின் தேவை முடிந்து விட்டது. அதனால் திராவிட கழகம் பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனை, விதி மறுப்பு, கடவுள் மறுப்பு கொள்கையில் நிலைத்து நிற்க முடியாமல் வீழ்ச்சி அடைந்து விட்டது.
பெரியாருக்கு இரண்டு முகம் ஒன்று சமத்துவ போராளி, மற்றொன்று பகுத்தறிவாளி. சமத்துவ போராளியாக வெற்றி பெறமுடிந்த பெரியாரால் பகுத்தறிவாளியாக கடவுள் மறுப்பிலும், விதி மறுப்பிலும், முற்போக்கு சிந்தனையிலும் வெற்றி பெற முடியவில்லை. காரணம், பெரியார் ஆய்வாளர் அல்ல, அவர் ஒரு சமூகப் போராளி கடவுள் மறுப்பையும் விதி மறுப்பையும் அறிவியல் பூர்வமாக மக்களுக்கு நிரூபிக்க முடியாததால் பெரியாரின் கருத்தை மக்கள் ஏற்கவில்லை.
பகுத்தறிவு என்பது நான் சொன்னாலும் அதை அப்படியே நம்பாமல் உன்னுடைய அறிவுக்கு எது சரியோ அதை பின்பற்றுவது தான் என்றும், அனைவரும் சுயமாக சிந்திக்க வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு பெரியார் தெரிவித்துள்ளார்.இதை இன்றைய திராவிட கழக தலைவர்களும் தொண்டர்களும் புரிந்துகொண்டு பெரியார் 70 ஆண்டுகளுக்கு முன் அறிவித்த கடவுள் மறுப்பு, விதி மறுப்பு, சாதி மறுப்பு, மத மறுப்பு, முற்போக்கு சிந்தனை ஆகியவற்றை அப்படியே பின்பற்றாமல் பெரியார் அவரின் முன்னோர் கொள்கைகளை உடைத்து சமத்துவத்தை ஏற்படுத்தியது போல், திராவிட கழகத்தினர் அவர்களின் முன்னோரான பெரியாரின் தவறான பகுத்தறிவு சிந்தனையை உடைத்து காலத்துக்கு ஏற்ப அறிவியல்படி அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப கொள்கையை மறு சீரமைப்பு செய்தால் மட்டுமே தோல்வியடைந்த கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, முற்போக்கு சிந்தனை, சாதி மத ஒற்றுமை, ஆகியவற்றில் புதிய கொள்கையை ஏற்படுத்திக் கொண்டால் மட்டுமே திராவிட கழகம் சமத்துவத்தில் வெற்றி பெற்றது போல் பகுத்தறிவு புரட்சி யிலும் வெற்றி பெறமுடியும்.
கடவுளை வணங்குபவன் முட்டாள், கடவுளை கற்பித்தவன் அயோக்கியன் என்று பெரியார் சமத்துவத்தின் போராளியாக இருந்து சொன்னதில் தவறு ஏதும் இல்லை. காரணம் போர்க்களத்தில் எதிரியை வெட்டி வீழ்த்துவதுதான் நீதி. ஆனால் பகுத்தறிவு வழியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு நான் சொன்னாலும் நம்பாதே உன் அறிவால் சிந்தித்து செயல்படு என்று அறிவுரை கூறிவிட்டு தன்னுடைய கருத்துக்கு எதிரானவர்களை தரக்குறைவாக விமர்சிப்பது பகுத்தறிவு தந்தைக்கு அழகல்ல. எதிரியின் கருத்துக்கு மதிப்பளிப்பது தான் பகுத்தறிவு.
கடவுள் இல்லை என்ற பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையை திராவிட கழகத்தில் உள்ள முன்னணி தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இடத்தில்கூட பெரியாரால் புரியவைக்க அல்லது பின்பற்ற வைக்க முடியவில்லை என்பதே பெரியாரின் பகுத்தறிவு கொள்கை மக்களிடம் தோற்றுப் போனதற்கு சான்று.
கதையை, கவிதையை, கட்டுரையை, இலக்கியத்தை படிப்பதும் படிக்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் பகுத்தறிவாளர்கள் என்று தன்னை நினைத்துக் கொள்பவர்கள் தன்னுடைய கொள்கைக்கு மாற்றுக் கருத்தை ஒருவர் சொன்னால் அதை ஆய்வு செய்ய வேண்டியது அவர்களின் கடமை.
என்னுடைய ஆய்வின்படி கடவுள் இல்லை, ஆனால் கடவுளை வணங்கினால் நன்மைகள் நடக்கும்.
கடவுள் யாரையும் காக்கவில்லை நாளைய பொழுது நல்லதாகவே இருக்கும், கடவுள் நம்மை காப்பார் என்ற நம்பிக்கையே இன்றைய துன்பத்திற்கு மருந்தாக உள்ளது, அதனால் தான் முன்னோர்கள் சொன்னார்கள் நம்பியவர்களுக்கு கடவுள் துணை இருப்பார் என்று. கடவுள் நம்பிக்கை என்பது கைத்தடியை போன்றது தடுமாறும் போது நம்மை தாங்கிப் பிடிக்கும், அதை ஒருவரிடமிருந்து பிடுங்குவது பாவம்.
விதி என்பது உண்மை எது நடக்குமோ அது நடந்தே தீரும். வீதி அறிவியல் உண்மை என்பதை மக்களுக்கு புரிய வைத்தால் தான் கடவுள் இல்லை என்பதையும், பிறப்பால் அனைவரும் சமம் என்ற சமத்துவத்தையும் இந்த உலகம் ஏற்கும்.
மாற்றம் ஒன்றே மாறாதது, அதுபோல் விதி ஒன்றே மாறாதது, மாறாத விதியை கடவுளாலும் மாற்ற முடியாது, எனவே கடவுள் இல்லை. விதி என்பது இயற்கை நேற்றைய நிகழ்வுதான் இன்றைய நிகழ்வுக்கு ஆதாரம் இன்றைய நிகழ்வு தான் நாளைய நிகழ்வுக்கு ஆதாரம் இந்த தொடரினை தத்துவத்தை மீறி இறைவன் செயலால் இந்த உலகில் இதுவரை எந்த நிகழ்வுகளும் நடக்காததால் கடவுள் இல்லை.
விதிப்படி தான் அனைத்தும் நடக்கின்றது ஆனால் நடப்பதற்கு முன் எது விதி என்று அறிந்துகொள்ள முடியாது, அதுதான் விதி.
விதிப்படி தான் அனைத்தும் நடக்கும் என்று எண்ணி ஒருவன் வீட்டிலேயே உழைக்காமல் முடங்கி இருந்தால் வறுமையின் கொடுமையில் துன்பப்பட வேண்டும் என்பது அவனுடைய விதியாக இருக்கும் என்று பொருள்.
ஒரு செயலை செய்வதற்கு முன் விதியை நம்பக்கூடாது. நம்முடைய அறிவையும் திறமையையும் மட்டுமே நம்ப வேண்டும், செயல் முடிந்து பலனை பெறும் போது இது விதியின் பலன் என்பதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும், அப்போதுதான் தோல்வியடைந்தாலும் துவண்டு விட மாட்டோம் வெற்றி பெற்றாலும் ஆணவம் கொள்ள மாட்டோம்.
கடமையைச் செய் ! பலனை எதிர்பார்க்காதே !!என்று நம் முன்னோர்கள் சொன்னதன் பொருள் உன்னுடைய கடமையை, பணியை, திறம்பட செய்தால் அதற்கான பலன் விதிப்படி கிடைக்கும் என்பதே. அதுபோல் முற்பகல் செய்வின் பிற்பகல் விளையும் என்பது ஆன்மீகம் அல்ல, விதி என்ற தொடர்வினை தத்துவத்தை கடவுளின் செயலாக கற்பித்து உள்ளார்கள்.
விதியை உண்மை என்று புரிந்துகொண்டால் மட்டுமே தாழ்வுமனப்பான்மை இல்லாமலும், ஆணவம் இல்லாமலும் அனைவரிடமும் சமமாக பழகமுடியும். சமத்துவத்தின் திறவுகோல் விதியைப் பற்றிய புரிதல் மட்டுமே.எனவே நான் எழுதிய உயிருள்ள புத்தகத்தில் உள்ள ஆய்வுக்கட்டுரையை திராவிட கழக நண்பர்கள் படித்து பயன் படுத்திக் கொண்டால் மட்டுமே திராவிட கழகம் வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரமுடியும். அதுபோல் என்னுடைய ஆய்வு மக்களுக்கு பயன்பட வேண்டும் என்றால் அது திராவிட கழக நண்பர்களால் மட்டுமே சாத்தியம். காரணம் சமத்துவ போராளிகளால் மட்டுமே சமத்துவத்துக்காகவே எழுதப்பட்ட அறிவியல் உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்ல முடியும்.
கத்தி செய்யும் கொல்லன் வீரனாக இருக்க முடியாது, வீரன் கத்தி செய்யும் கொல்லனாக இருக்க முடியாது என்பதை போல், போராளி ஆய்வாளராக இருக்க முடியாது, ஆய்வாளர் போராளியாக இருக்கமுடியாது என்பதால் என்னுடைய ஆய்வு கட்டுரையை பயன்படுத்தி பெரியாரின் சமத்துவ கனவை நிறைவேற்ற திராவிட கழகத்தினருக்கு வாழ்த்துக்கள்.
in Politics