13 August 2024
by
Vijayakumaran
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14, இந்திய குடிமக்கள் அனைவரும் சமம் என்ற பாதுகாப்பைக் கொடுக்கின்றது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க கூடிய பொறுப்பு குடியரசுத் தலைவருக்கும் அவருக்கு இணையாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிஅரசருக்குமே உள்ளது. ஒன்றிய மந்திரிசபை அனுப்பும் கோப்புகளில் கையெழுத்து போடும் அதிகாரம் மட்டும் குடியரசுத் தலைவருக்கு இல்லை, தானாக முன்வந்து சில உத்தரவுகளையும் ஒன்றிய அரசுக்கு பிறப்பிக்கவும் உரிமை உள்ளது, அது போல் வழக்கை விசாரித்து தீர்ப்பு அளிப்பது மட்டுமே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் பணி அல்ல, தானாக முன்வந்தும் சில உத்தரவுகளை ஒன்றிய அரசுக்கு பிறப்பிக்கலாம். அதன்படி கடந்த 75 ஆண்டு சுதந்திர இந்தியாவில் அவர்களுடைய பொறுப்பை, கடமையை செய்து இருக்கிறார்களா ? அரசியலமைப்பு சட்டப் பிரிவு14 ன் படி இந்திய குடிமக்கள் அனைவரும் சமம் என்ற பாதுகாப்பை இவர்கள் கொடுத்து உள்ளார்களா? இந்தப் பாதுகாப்பு அனைத்து மாநில குடிமக்களுக்கும் கிடைத்திருந்தால் பிரதமர் சொல்வதுபோல் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றி 75வது சுதந்திர தினத்தை கொண்டாடலாம்! பணம் உள்ளவரை மட்டுமே இந்த சட்டம் பாதுகாக்கின்றது பணமில்லாத பாமரனை இந்த சட்டம் பாதுகாக்கவில்லை என்று மக்களின் பொதுவான கருத்தாக இருந்தாலும், இவை அனைத்தும் அதிகாரத்தில் உள்ளவர்களின் தனி மனித சட்ட மீறலாக தான் இருக்கு, எனவே இது இங்கு விவாதப் பொருள் அல்ல. பிராந்தியங்களின் கூட்டமைப்புதான் சுதந்திர இந்திய. அரசியலமைப்பு சட்டப் பிரிவு 14 இன் படி அனைத்து மாநில குடிமக்களும் சமம் என்றால் அனைத்து மாநில மொழிகளும் சமம்தான்.ஆனால் இது வடஇந்திய இந்தி மொழி வெறியர்களால் மறுக்கப்பட்டு இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் தகவல் தொடர்பு மொழி என்றார்கள். இந்தி பேசாத மக்களின் உரிமை கடந்த 75 ஆண்டுகளாக மறுக்கப்படுகின்றது, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரான இந்த உரிமை மீறல் 75 ஆண்டுகளாக பதவியிலிருந்த, பதவியை அனுபவித்து சுகவாழ்க்கை வாழ்ந்த குடியரசுத் தலைவருக்கும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் தெரியாதா? இந்தியை தாய்மொழியாக இல்லாத மாநிலத்து மக்களிடம் வரியை வாங்கி அவர்கள் மீது இந்தியைத் திணிக்க, இந்தியை வளர்க்க ஆண்டுக்கு பல ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு செலவு செய்வது சுதந்திர இந்தியாவில் அநீதி அல்லவா? 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நன்னாளில் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14 ன்படி அனைத்து மாநில மொழியும் சமம் என்பதை இந்திய குடியரசு தலைவரும், உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசரும் அறிவிக்க வேண்டும், அப்போதுதான் அனைத்து மாநில மக்களுக்கும் தேசபக்தி, தேச ஒற்றுமை உணர்வு ஏற்படும். குரானா வைரஸை விரட்ட, மின் விளக்கை அணைக்க சொன்னதுபோல், மக்களிடம் தேச ஒற்றுமையை ஏற்படுத்த தேசியக்கொடியை வீட்டின் முன் கட்டச் சொல்வதால்எந்த பயனும் இல்லை. சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால்தான் அந்த சட்டத்தை மதித்து கட்டுப்பாடோடு வாழ்வார்கள், எனவே உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் தானாக முன்வந்து 75 ஆண்டுகளாக மொழி அடிமையாக உள்ள மக்களுக்கு 75வது சுதந்திர நாள் பரிசாக அனைத்து மாநில மொழிக்கும் இந்தியை போல் தேசிய அலுவல் மொழி அந்தஸ்து கொடுக்க வேண்டும், அப்போதுதான் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது உறுதியாகும். 75 ஆண்டுக்கு முன்பே சுதந்திரம் அடைந்தபோதே அனைத்து மாநில மொழிக்கும் சம உரிமை கொடுக்கப்பட்டு இருந்தால் அனைத்து தொடர்வண்டி நிலையத்திலும், சாலையிலும் என் தாய்மொழி எனக்கு இந்திய தலைநகரம் டெல்லி வரை வழிகாட்டி இருக்கும் !என்னுடைய அப்பாவுக்கும், தாத்தாவுக்கும் வழி காட்டியிருக்கும் !என் மொழிக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டதால் மூன்று தலைமுறையாக கிணற்று தவளையாக தமிழ் நாட்டுக்குள்ளேயே வாழ்ந்து விட்டோம். இந்த இழப்பை கணக்கிட முடியாது, இந்தியை தாய்மொழியாக கொண்டவனுக்கு நாடு முழுவதும் அவன் தாய்மொழி அவனுக்கு வழி காட்டுவதால் நாடு முழுவதும் பரந்து வாழ்ந்து கொண்டு இந்தியால் அனைவரையும் அடிமைப்படுத்துகின்றான். மூன்று தலைமுறையாக நாம் அடைந்த இழப்பை நான்காவது தலைமுறையும் அடையாமல் இருக்க அரசியல் சார்பு இல்லாமல் அனைவரும் நம் உணர்வை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்தினால் நிச்சயம் மொழி சுதந்திரம் நமக்கு கிடைத்துவிடும் ! நம்பிக்கையே வெற்றியின் முதற்படி !!
in Politics