சனாதன தர்மம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் சாகடிக்கப்பட்ட விஷப்பாம்பு. செத்த பாம்பை அடிப்பது போன்றது தான் சனாதன எதிர்ப்பு. செத்த பாம்புக்கு உயிர் கொடுக்க முயற்சிப்பது தான் சனாதனத்திற்கு ஆதரவாக பேசுவோரின் நோக்கம்.
சனாதனம் என்ற வார்த்தையின் பொருள் ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை என்பதுதான்.
தர்மம் என்ற வார்த்தையின் பொருள் நீதி.
சனாதன தர்மம் என்பது ஆரம்பமும் இல்லாமல், முடிவும் இல்லாமல் நிலைத்து நிற்கும் நீதி என்று பொருள்.
வரலாற்று நிகழ்வுகளை பார்க்கும் பொழுது நிலைத்து நிற்கும் நீதி என்று எதுவுமே இல்லை. நீதி என்பது அரசியலுக்கு ஏற்ப, சமுதாயத்தின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருப்பதுதான். மாறாத நீதி என்று சொல்வதை அறிவுள்ள யாரும் ஏற்க மாட்டார்கள்.
சனாதன தர்மத்திற்கு இந்து மதத்திற்கும் தொடர்பு இல்லை, சனாதன தர்மம் என்ற நீதி மன்னர்கள் ஆட்சி காலத்தில் இருந்த நீதி. இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் ஜனநாயக ஆட்சியின் நீதி என்பது அனைவரும் சமம் என்பதுதான். இன்று ஆண், பெண் பாகு பாடு இல்லை. சாதி, மத பாகுபாடு இல்லை. இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த நாட்டை ஆளும் உரிமை உள்ளது. இந்த நீதியை நம் அரசியல் அமைப்பு சட்டம் தான் நமக்கு கொடுக்கின்றது.
ஜனநாயக முறைப்படி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நீதியின் படி பதவி ஏற்றுக்கொண்ட ஆளுநர் அவர்களும், பிரதமர் அவர்களும் மன்னர்கள் காலத்தில் இருந்த சர்வாதிகாரியின் நீதியான சனாதன நீதியை ஜனநாயக நாட்டில் ஆதரித்து பேசுவது ஜனநாயகத்திற்கு எதிரானது.
மன்னர்களின் சர்வாதிகார ஆட்சி காலத்து நீதியை இந்து மத நீதி என்று இந்து மதத்துடன் இணைத்தும், சனாதன தர்மத்தை எதிர்ப்பது இந்து மதத்தை எதிர்ப்பதாக பொருள் என்றும் மக்களிடம் மத உணர்வை தூண்டுவது ஜனநாயக நீதியான இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான சர்வாதிகாரியின் நீதியான சனாதன நீதியை ஆதரித்து பேசும் கவர்னர் அவர்களையும், பிரதமர் அவர்களையும் கண்டித்து ஜனநாயக கருத்தை பதிவிட வேண்டிய பொறுப்பு குடியரசு தலைவருக்கும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் இருப்பதால், அவர்களுடைய எதிர்வினையை ஜனநாயக நீதி அடிப்படையில், இந்திய குடிமகன் என்ற உரிமையில் நான் எதிர்பார்க்கின்றேன்.