உங்கள் வாக்கு யாருக்கு என்று, நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். நான் வாக்களிக்கப் போகும் கட்சியின் பெயரை சொன்னேன். அதை கேட்ட நண்பர் நானும் அதற்கே போடட்டுமா என்று கேட்டார். நான் அதற்கு வேண்டாம் என்றேன்.நண்பருக்கு புரியவில்லை, நான் சொன்னேன், நாம் எடுத்த முடிவு நமக்கு சரியானதாக இருக்கலாம் அது மற்றவர்களுக்கும் சரியானதாக தான் இருக்கும் என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. எனவே உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதற்கு உங்களுடைய வாக்கை போடுங்கள் அதுதான் உண்மையான ஜனநாயகம் என்றேன்.
தொடர்ந்து நண்பரிடம் சொன்ன பதிலை இங்கு பதிவிட்டுள்ளேன்.
உண்மையான ஜனநாயகம் என்பது ஒரு வாக்காளர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் அந்த உரிமை மறுக்கப்பட்டால் அது ஜனநாயகம் அல்ல.
ஒரு நீதியரசர் ஒரு குற்றவாளியின் குற்றத்தை உறுதி செய்யவும், அதற்கு தூக்குத்தண்டனை கொடுப்பதற்கும் சட்டத்தில் இடம் உள்ளது, ஆனால் அந்தக் குற்றவாளி மக்கள் மன்றத்திற்கு செல்லும் உரிமையை தடுக்க எந்த ஒரு நீதியரசருக்கும் உரிமை இல்லை.
பலகோடி மக்கள் சேர்ந்து எடுக்கக்கூடிய முடிவை தனி ஒருவர் எடுத்தால் அது சர்வாதிகாரம். அல்லது பலகோடி மக்கள் சேர்ந்து எடுக்கும் முடிவு தவறு என்று எண்ணி தனி ஒரு நீதியரசர் முடிவு எடுத்தால் அது ஜனநாயக படுகொலை.
குற்றவாளி தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் தடை விதிப்பது என்பது குற்றவாளிக்கான தண்டனை மட்டுமல்ல, கோடிக்கணக்கான வாக்காளர்களுக்கும் இது தண்டனை தான். சசிகலா போன்றவர்கள் தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது ஜனநாயகத்துக்கு எதிரானது.
இதை விட கொடுமையானது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி, எம்.எல்.ஏக்களே. மக்களின் தேர்தல் முடிவு சரியானதாக இருக்காது என்று எண்ணி நாங்கள் சொல்லும் நபரில் ஒருவரை தான் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சட்டம் இயற்றி ஜனநாயகத்தை ரிசர்வேஷன் மூலம் (தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பெண்களுக்கும்) படுகொலை செய்வது தான்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்வரே, மக்களை நிர்பந்திப்பது என்பது எப்படி ஜனநாயகம் ஆகும்.
வரம் கொடுத்தவன் தலையிலேயே கையை வைப்பது போல் தான் இந்த ரிசர்வேஷன் சட்டம்.
“என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்று சொல்வதையே ஜனநாயக புரச்சியாக நினைத்து ஏமாறும் மக்களே! எப்போது “நிர்பந்திக்காதே !” என்ற உண்மையான ஜனநாயக புரட்சியை செய்யப் போகின்றாய் !