ஒரு சமுதாயத்தின் அறிவு தான் அந்த சமுதாயத்தின் நீதியாக இருக்க முடியும். நீதி மாறவேண்டுமென்றால் சமுதாய அறிவு மாறவேண்டும். பெரும்பான்மை மக்களிடம் அறிவு மாற்றமில்லாமல் நீதி மாற்றம் ஏற்படாது.
ஒரு நடிகையின் தற்கொலைக்கான காரணத்தை தெரிந்துகொள்ள மக்களுக்கும், ஊடகங்களுக்கும் இருக்கும் ஆர்வம் மாநில பொருளாதாரம், கல்வி, மொழி ஆகியவற்றின் உரிமைகளை மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டும் என்பதில் இல்லை.
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய கடமை ஊடகங்களுக்கு தான் அதிகம் உள்ளது ஆனால் இங்கு ஊடகங்களால் அனைத்தும் அரசியலாக்கப்படுவதாலும், வணிகமாக்கப்படுவதாலும் மக்களிடம் எதைப் பற்றியும் தெளிவான விழிப்புணர்வு இல்லை.
நம்மிடம் வாங்கும் வரிப்பணத்தில் பல கோடி ரூபாய் செலவு செய்து மாநில மக்கள் நலனுக்காக வரும் மத்திய அரசு விளம்பரங்கள் வரி கொடுக்கும் மாநில மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் மாநில மொழியில் இல்லாமல் இருப்பது என்பது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதோ, மக்கள் நலனோ,மத்திய அரசுக்கு முக்கியமல்ல, இந்தி மொழியை மக்கள் மீது திணிக்க வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள் என்பதையே வெளிப்படுத்துகின்றது.
மத்திய அரசுக்கு வரி வருவாய் கொடுக்க தனி நிலப்பரப்பு ஏதுமில்லை, பல மொழி பேசும் மாநில மக்கள் கொடுக்கும் வரிதான் மத்திய அரசின் வரி வருவாய். இந்த வரி பணத்தை அனைத்து மாநில நலனுக்காகவும் செலவு செய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் கடமை என்பதை மக்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.
மொழி உரிமையை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கடமைப்பட்ட ஊடகங்களே பணத்திற்காக மக்களுக்கு புரியாத வட இந்திய மொழியில் மத்திய அரசின் நலத்திட்ட விளம்பரங்களை செய்வது என்பது வேதனையாக உள்ளது.இந்த விளம்பரத்தால் வரி கொடுக்கும் மக்களுக்கு என்ன பயன் ? மத்திய அரசின் இந்த செயல் கொடுங்கோல் ஆட்சியின் உச்சம். இதற்கு இந்தி வெறியர்களின் பதில் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம் காரணம் நாம் தான் 73 ஆண்டுகளாக மொழி அடிமைகளாச்சே!