8 May 2013
by
Vijayakumaran
இது அரசியல் பதிவு அல்ல, தமிழர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு மாநில மக்களும் தன் மொழி உரிமையை பாதுகாக்க விழிப்புடன் இருக்க வேண்டும், ஒரு சில மாநில கட்சிகள் பிஜேபி கட்சியுடன் இணைந்து முன்மொழி கொள்கையை ஆதரிப்பது அரசியல் சுயநலத்துக்காக தான்.அவர்களுக்கு தமிழர்கள் மீதும், மொழியின் மீதும் அக்கறை இல்லை, இவர்கள் அரசியல் கைக்கூலிகள்.
பதவி அதிகாரத்தைப் பெற மக்களின் மொழி உணர்வை கருணாநிதி பயன்படுத்தியதை போல் ஸ்டாலின் செய்யாமல், உண்மையிலேயே தமிழுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் மொழி உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றால், பதவிக்காக தேர்தலில் தேசிய அளவில் கூட்டணி அமைத்தது போல் மொழி விடுதலைக்கும் தேசிய அளவில் கூட்டணி அமைத்து செயல்பட்டால் நிச்சயம் இந்திக்கு நிகராக அனைத்து மாநில மொழிகளுக்கும் அங்கீகாரம் கிடைக்கும். மக்கள் விழிப்புடன் கவனித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
திமுக தேசிய அளவில் மாநில கட்சிகளின் கூட்டணி அமைத்து போராடாமல் தமிழ்நாட்டுக்குள்ளேயே ஹிந்தி எழுத்துக்கள் மீது கருப்பு சாயம் பூசுவதால் எந்த பயனும் இல்லை. வரும் தேர்தலுக்காக மக்களிடம் மொழி உணர்வை தூண்டாமல், கடந்த தேர்தலில் திமுகவை மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி கடனாக தமிழக மக்களுக்கு மொழி உரிமையை பெற்றுக் கொடுங்கள்.
இந்திக்கு நிகராக மொழி அங்கீகாரம் தமிழுக்கு கிடைத்த பிறகு நாம் எத்தனை மொழிக் கொள்கையை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளலாம்.
நாம் மூன்று மொழியை படிக்க முடியாததால் மும்மொழி கொள்கையை எதிர்க்க வில்லை,நம்மை மூன்றாவது மொழியாக ஹிந்தி அடிமைப்படுத்த கூடாது என்பதற்காகவே மும்மொழி கொள்கையை எதிர்க்கின்றோம்.
அரசியல் புரிதல் இல்லாமல் தி மு க வை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு முன்மொழி கொள்கையை ஆதரிப்பது என்பது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதற்கு சமம்.
மொழி உரிமையின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள 12 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய “மீண்டும் சுதந்திரப் போராட்டம் “என்ற கட்டுரையை படித்து பயன்பெருங்கள்.
முன்னுரை
நாம் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள் ஆன பிறகும், நம்முடைய மாநில மொழியைப் பற்றி விழிப்புணர்வு நம்மில் பலரிடம் இல்லையே என்ற ஆதங்கத்தில் இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன்.இந்தியை எதிர்த்து நம் மாநிலத்தில் பல போராட்டங்களை நாம் செய்துள்ளோம், அதனால் நமக்கும், நம் மொழிக்கும், எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்தி எழுத்தின் மீது கருப்பு சாயத்தைப் பூசியதுதான் நாம் கண்ட வெற்றி.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் அரசியலாக்கப்பட்டது. இதனால் பல மாநில அரசியல் கட்சிகள் தங்கள் செல்வாக்கை மக்களிடம் பெருக்கிக் கொண்டார்கள், இதை முறியடிக்க தேசியக் கட்சி என்ற போர்வையில் இந்தி பேசும் வடமாநிலக் கட்சிகள் நம் மாநிலத் தலைவர்களையே பயன்படுத்தி இந்திக்கு ஆதரவாக, இந்தியைக் கற்றுக் கொண்டால் மத்திய அரசு வேலை கிடைக்கும், இந்தியா முழுவதும் சென்று வேலை பார்க்கலாம், இதனால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும் என்று பிரச்சாரம் செய்தார்கள். இதைத் தொடர்ந்து இந்தியைக் கற்பதால் நல்லதா? கெட்டதா? என்ற கேள்விதான் மக்களிடம் எழுந்ததே தவிர, ஏன் தென் மாநில மொழிக்கு வட மாநில மொழியான இந்திக்கு நிகராக தேசிய அலுவல் மொழி அந்தஸ்து கிடைக்கவில்லை? என்ற கேள்வி எழவில்லை.
முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா? என்ற கேள்வியை நம்மிடம் பலர் கேட்டிருப்பார்கள் நாமும் பலரிடம் கேட்டிருப்போம். ஆனால் இந்தக் கேள்வியே தவறான கேள்வி என்பதை நாம் உணர்ந்திருக்க மாட்டோம். முட்டை எங்கிருந்து வந்தது, அல்லது கோழி எங்கிருந்து வந்தது, என்று தான் கேள்வி இருக்கவேண்டும். அப்போதுதான் சரியான பதில் கிடைக்கும். அதாவது பரிணாமவளர்ச்சி என்ற அறிவியல் சார்ந்த பதில் நமக்கு கிடைக்கும். அறிவைப் பயன்படுத்தாமலேயே இரண்டில் ஒன்றை தான் நீ சொல்ல வேண்டும். என்று கேள்வி கேட்பது எப்படி அறிவற்ற செயலோ, அதுபோல் தான் பல மாநில மொழிகள் இருக்க மாநில மொழியான இந்தியை மட்டும் தேசிய அலுவல் மொழியாக அறிவித்துவிட்டு இந்தியைக் கற்பதால் நன்மையா? தீமையா? என்று கேட்டால் நாம் என்ன சொல்வது. கேள்வியே தவறு.
இந்தி அல்ல, எந்த மொழியைக் கற்றாலும் நல்லதுதான், ஒரு மொழியை நாமாக விரும்பிக் கற்பது என்பது வேறு, வேறு ஒரு மாநில மொழி நம்மை ஆட்சி செய்வது என்பது வேறு, பிற மாநில மொழிகள் அனைத்தும் நமக்குச் சகோதர மொழிகள்தான், எனவே இந்தி மொழியை நாம் எதிர்க்க வேண்டியதில்லை. இந்திக்குச் சமமாக நம் மாநில மொழியும் தேசிய அங்கீகாரத்தைப் பெற வேண்டும், அப்போதுதான் நாம் உண்மையில் சுதந்திரம் பெற்றதாகப் பொருள். அந்த நாள் வரை இந்தி பேசும் வடமாநிலத்தவருக்கு நாம் அடிமைகள்தான். இதை அனைத்து மக்களும் உணர வேண்டும்.
- இரா. விஜயகுமாரன்
மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம்…
இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெறுவதற்க்கு முன்பு வரை ஒரே நாடாகத்தான் இருந்தது. சுதந்திரம் கிடைத்ததும் பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்து சென்றது. அதனால் அவர்கள் மொழியான உருதே அவர்கள் நாட்டின் ஆட்சி மொழியாக உள்ளது.
நம்மை ஆங்கிலேயர்கள் அடிமை படுத்துவதற்கு முன்பு இந்தியா என்ற ஒரு நாடே இல்லை. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நாடாக அல்லது (குருநில மன்னர்களின்) பல நாடாகத்தான் இருந்தது.
ஆங்கிலேயரை எதிர்த்து சுதந்திர போராட்டம் நமது இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலத்திலும் நடந்தது. சுதந்திர போராட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல ஆயிரம் மக்கள் தன் உயிரை கொடுத்ததால்தான் நாம் இந்த சுதந்திரத்தைப் பெற்று உள்ளோம். இந்த சுதந்திரத்தை இந்தி மொழியைத் தாய் மொழியாக உள்ள வட நாட்டவர்கள் மட்டும் வாங்கவில்லை. இந்தியாவில் இந்தியைத் தவிர பிற மொழியைத் தாய்மொழியாக உள்ளவர்களும் சேர்ந்து தான் இந்த சுதந்திரத்தைப் பெற்றோம்.
பாகிஸ்தானைப் போல் தென் மாநிலத்தை சேர்ந்த சுதந்திர போராட்டத் தலைவர்கள் தனி நாடு கேட்டிருந்தால் நம்முடைய தாய்மொழியும் தேசிய ஆட்சி மொழியாக இருந்திருக்கும்.
தென் மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்டத் தலைவர்கள் ஒற்றுமையையே விரும்பியதால் நாம் மீண்டும் அடிமைகளாக ஆகிவிட்டோம். நாம் அன்று ஆங்கிலேயரிடம் அடிமைகளாக இருந்தோம். இன்று இந்தியை தாய் மொழியாக உள்ள வட மாநிலத்தவரிடம் அடிமைகளாக இருக்கின்றோம். ஆம் நாம் இன்னும் அடிமைகள்தான், நம்முடைய தாய் மொழியும் பிற மாநில மொழியைப் போல் நம் நாட்டை ஆளவில்லை என்றால் நாம் அடிமைதானே. தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் படித்து பட்டயம் பெற்று மத்திய அரசு அலுவலகத்துக்கு வேலைக்குச் சென்றால் நமக்கு முன் உரிமை இல்லை. அப்படி என்றால் நாம் இந்தியன் இல்லையா! எனவே நம் மக்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்றுதான் பொருள்.
மொழிக்கு உயிர் இல்லை, நாம் மொழியை வளர்க்க வேண்டாம், மொழிதான் நம்மை வளர்க்க வேண்டும். நாம் வாழவேண்டும் என்றால் தாய் மொழியைப் பாதுகாக்க வேண்டும். எங்கெல்லாம் நம் தாய்மொழிக்கு அங்கிகாரம் இருக்கின்றதோ அங்கெல்லாம் நாம் வாழ முடியும் என்று பொருள். நம் நாடு இந்தியா என்று சொல்கின்றோம். ஆனால் நம் தாய்மொழி. இந்திய மொழியல்ல, நம் மொழிக்கு அங்கீகாரம் இல்லையென்றால் அந்த மொழியை பேசுகின்ற மக்களுக்கும் அங்கீகாரம் இல்லை என்றுதான் பொருள்.
மாநில மொழிகள் அனைத்தும் இந்தியாவின் ஆட்சி மொழிதான் என்ற அங்கீகாரம் அனைத்து மாநில மொழிகளுக்கும் கிடைத்தால்தான் மத்திய அரசின் வேலை வாய்ப்பு அனைத்து மாநிலத்தவருக்கும் கிடைக்கும்.
தாய்மொழியில் உயர் கல்வியைக் கற்றும் தாய் நாட்டில் என் மொழிக்கு முன்னுரிமை இல்லை, மத்திய அரசு அலுவலகத்தில் வேலையில் சேர்வதற்குக் கூடத் தகுதியில்லை என்ற நிலையில் எல்லோரும் இந்த நாட்டு மன்னர்கள் என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது.
இந்தியைத் தாய் மொழியாக உள்ள வடமாநிலத்தவர்கள் மட்டும் தான் இந்த நாட்டின் மன்னர்கள். இதுதான் உண்மை, மற்ற மாநிலத்தவர்கள் அனைவரும் அவர்களின் அடிமைகளே.
தென் மாநில மொழிகளுக்கு மொழி சுதந்திரம் கிடைக்கவில்லை என்றால் இன்னும் 20 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்படுகின்ற கொடுமைதான் இந்தியாவில் உள்ள தென் மாநில மக்களுக்கும் ஏற்படும். என்பதில் ஐயம் இல்லை. காரணம் வடமாநிலத்தவர்கள் தென்மாநில தலைநகரத்தை ஆக்கிரமித்து கொண்டார்கள். அதற்குக் காரணம் ரோட்டில் உள்ள மைல் கல்லில் ஆரம்பித்து தபால் நிலையம், ரயில் நிலையம், வங்கி, இன்சூரன்ஸ் அலுவலகம், ஏர்போர்ட் வரை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்திலும் அவர்கள்' தாய்மொழியான இந்தி இருப்பதால், இந்தியை தாய்மொழியாக உள்ள வடநாட்டவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அவர்கள் குடியேறி வாழ்வது எளிமையாக உள்ளது. ஆனால் தென் மாநிலத்தவர் வடமாநிலத்துக்கு சென்று குடியேரவோ, வேலையில் சேரவோ முடியவில்லை. ஏன் என்றால் கடந்த 66 ஆண்டுகளாக நம் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் வட மாநிலம் செல்ல முடியவில்லை. நம் மொழியும் தேசிய மொழியாக இருந்திருந்தால், நாமும் தகவல் பரிமாற்றம் கிடைக்கப் பெற்று இருப்போம், தென் மாநிலத்தவரும் பொருளாதாரத்தில் உயர்ந்து இருப்போம். நம்முடைய மாநிலத் தலைநகரை வட நாட்டவருக்கு விற்று இருக்கமாட்டோம்.
தொடர்ந்து தென்மாநில மொழிகள் அடிமைப்படுத்தப்பட்டால், மீதமுள்ள நம்முடைய கிராமங்களையும் இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் வாங்கி விடுவார்கள். பிறகு இந்தியைத் தாய் மொழியாக கொண்டவர்களுக்குத்தான் இந்தியா என்பார்கள் அப்போது நாம் எங்கு அகதிகளாக போவது. நம் நாட்டைவிட்டு!
தாய்மொழி நம்மை காக்கின்ற ஆயுதம், அதை நாம் பாதுகாத்தல் அது நம்மை காக்கும்.
மொழிப் பற்று என்று சொல்லிக்கொண்டு பதவிப் பற்றுடனும், பணப்பற்றுடனும் வாழ்கின்ற தலைவர்களிடம் இருந்தும், ஏழைக்கு உதவுகின்றேன் என்று கூறிக்கொண்டு தன் சுகத்துக்காகப் பதவியை தக்கவைத்துக் கொள்ள பல தவறுகள் செய்யும் தலைவர்களிடம் இருந்தும், மதம் சார்ந்த அரசியல் தலைவர்களிடம் இருந்தும், தேசிய கட்சிகள் என்று சொல்லுகின்ற வட நாட்டு அரசியல் கட்சிகளுக்கும் நாம் தேர்தலின் போது ஒட்டுப் போடாமல், மாநில மொழிக்கு, தேசியமொழி அந்தஸ்து பெற்று தருவேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுக்கின்ற ஒழுக்கமான தலைவர்களைப் பெற்றுள்ள மாநில அரசியல் கட்சிக்கு நாம் ஓட்டுப் போட்டால் தென் மாநில கட்சியின் கூட்டாச்சி மத்தியில் உருவாகும். அப்போது பாராளுமன்றத்தில் அனைத்து மாநில மொழிகளும் இந்தி மொழிக்கு இணையான தேசிய மொழிதான் என்ற மசோதா நிறைவேறும் அந்த நாள் எந்த நாளோ அந்த நாள் முதல்தான் நாம் அனைவரும் இந்தியர்கள்.
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் செய்வோம்,
வெற்றி பெறுவோம்,
கத்திக்குப் பதில் நம்முடைய ஓட்டு உரிமையை பயன்படுத்துவோம்,
வாழ்க மாநில மொழிகள் அனைத்தும்,
வளர்க அனைத்து மாநில மக்களும்,
அடிமைபடுத்தினால் புரட்சி வெடிக்கும்,
அன்பு காட்டினால் வாழ்வு இனிக்கும்,
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மட்டுமல்ல இந்தி மொழியை தாய் மொழி அல்லாதவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் அனைத்து மாநில மொழியும் இந்திய மொழியாக ஓர் ஆண்டுக்குள், அகிம்சை வழியில், ஜனநாயக முறைப்படி அங்கீகரிக்கப்படும். என்பதில் ஐயம் இல்லை.
தமிழ் மொழியை வளர்க்கின்றேன் என்று சொல்லிக்கொண்டு பலர் நம் நாட்டில் வளர்ந்து கொண்டுதான் உள்ளார்கள் ஆனால் அந்த மொழியும் வளரவில்லை, அதை சார்ந்த மக்களும் வளரவில்லை, நமது இந்தியா வலுவான ஜனநாயக அமைப்பைப் பெற்று உள்ளதால் இளைஞர்கள் மத்தியில் மொழி சம்மந்தமான விழிப்புணர்வு ஏற்பட்டால் போதும் நாம் எளிதில் மொழி சுதந்திரம் பெற்றுவிடுவோம் என்பது உறுதி. எனவே இளைஞர்கள் இந்த கருத்தைப் பல ஊடகங்கள் மூலம் மக்களுக்குக் கொண்டு சென்றால் நமக்கு வெற்றிதான்.
நம் வீடுகளில் தமிழைப் பேசுவதால் தமிழ் வளராது, அதை பேசுகின்ற நாமும் உயரமாட்டோம், நம் மாநில மொழியான தாய் மொழி தமிழை இந்தியாவின் வடமாநில மொழியான இந்திக்கு இணையான இந்திய ஆட்சி மொழி என்ற அங்கீகாரம் தமிழுக்கு கிடைத்தால், எந்த மாநில மொழியும்நம்மை ஆளாது. அப்போது நம் மொழி தானாகவே வளரும், ஆதலால் நாமும் உயருவோம். Cell-ஐ கைபேசி என்றும், Car-ஐ மகிழ்உந்து என்று கூறுவதாலும், தமிழ் சினிமாவுக்கு, தமிழில் பெயர் வைப்பதாலும், தமிழ் மக்கள் உயரமாட்டார்கள். இது போன்று மக்களை ஏமாற்றும் செயலைத்தான் இதுவரை பல மாநிலக் கட்சிகள் செய்து வருகின்றன.
ஆங்கிலேயரிடம் நம் நாட்டு மக்கள் அடிமையாக பல நூறு ஆண்டுகள் வாழ்ந்ததால் சுதந்திரம் கிடைத்தும், இந்தி பேசுகின்ற வடழாநிலத்தவரிடம் நாம் அடிமைகளாக இருப்பதை மக்கள் இன்னும் உணரவில்லை. தேசியக் கட்சிகள் என்ற போர்வையில் வடநாட்டைச் சார்ந்த அரசியல் கட்சிகள் தேசிய ஒற்றுமை என்ற பெயரில் பிற மொழி பேசுகின்ற மாநிலத்தை அடிமைபடுத்துகிறார்கள் சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு வரை தேசிய கட்சிகள் தேசியக் கட்சிகளாக இருந்தன. அதற்கு அனைத்து மாநிலத் தலைவர்களும் ஆதரவு கொடுத்தார்கள். சுதந்திரம் பெற்ற உடன் அது வட மாநிலத்தவர் கையில் சென்றுவிட்டதால் இந்தியைப் போல் பல மாநில மொழிகள் இருந்தும் இந்தியை மட்டும் இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவித்துவிட்டார்கள், எனவே வட மாநிலத்தைச் சேர்ந்த கட்சிகளுக்குத் தென் மாநிலத்தைச்சேர்ந்த மக்கள் ஒரு ஓட்டைக் கூட போடக்கூடாது அப்போது தான் தென் மாநிலத்திற்குச் மொழி சுதந்திரம் கிடைக்கும். இன்று நாம் டில்லி சென்றால் நம்முடைய நாட்டில்தான் நாம் இருக்கிறோம் என்ற உணர்வு நமக்கு இருக்காது ஏன் என்றால் நம்முடைய மொழியை எந்த அரசு அலுவலகத்திலும் பார்க்க முடியாது. நம்முடைய மொழிக்கும் தேசிய ஆட்சி மொழியாக அங்கீகாரம் கிடைத்தால் மத்திய அலுவலகம் அனைத்திலும் இந்தியைப் போல் நம் மொழியும் நாடு முழுவதும் இருக்கும். அப்போது நாம் இந்தியாவில் எங்கு சென்றாலும் நம் நாட்டுக்குள்தான் இருக்கிறோம் என்ற உணர்வு இருக்கும். அப்போதுதான் இந்தியா நம்முடைய நாடு, என்ற தேசிய ஒற்றுமை உணர்வு ஒவ்வொரு மாநிலத்தவர் இடமும் தோன்றும்.
ஒரு நாள் நானும் என் நண்பரும் தேநீர் அருந்துவதற்க்காக உணவகத்துக்கு சென்று இருந்தோம். எனது நண்பர் தமிழ்நாடு காவல் துறையில் உள்ளார். தேநீர் அருந்திவிட்டு வெளியில் வரும்போது ஒரு பெண் கையில் குழந்தையுடன் நின்று கொண்டு வருபவர்களிடம் எல்லாம் பிச்சை எடுத்து. கொண்டிருந்தார். நானும் என் பங்குக்கு ஒரு ரூபாய் கொடுத்து விட்டு வந்தேன் அப்போது நண்பர் சொன்னார் இது போல் பிச்சை எடுப்பவர்களை ஒரு நாள் விசாரித்தேன். அவர் வைத்திருக்கின்ற குழந்தை அவருக்கு சொந்தமானது அல்ல, பிச்சை எடுக்க உதவியாக இருக்கவேண்டும், அதே சமயம் அது இடையூறாக இருக்க கூடாது என்பதற்காக அந்த குழந்தைக்கு தொடர்ந்து தூங்க மாத்திரை கொடுத்து விடுவார்களாம் என்று தெரிய வந்தது என்று கூறினார். இது போல்தான் நம் மாநிலத்தைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் தான் வாழ வேண்டும். தன் குடும்பம் வாழவேண்டும், என்பதற்காக அந்த பெண்ணைப் போல் தமிழைக் காண்பித்து பிச்சை எடுத்து அரசியல் நடத்தி கோடீஸ்வரர்களாக ஆகிவிட்டார்கள். ஆனால் தமிழ் மக்கள் காப்பாற்ற ஆள் இல்லாமல் 66 ஆண்டுகளாக மயக்கத்தில் உள்ளார்கள்.
அறிவின் வழிகாட்டுதலின்படி நடப்பவர்களிடம் தான் ஒழுக்கம் இருக்கும். ஒழுக்க மானவர்களால்தான் சிறந்த நேர்மையான நிர்வாகத்தை செய்ய முடியும். ஒழுக்கமானவர்களுக்கு எளிமை இயல்பாகவே இருக்கும். எனவே சுயவாழ்க்கையில் ஒழுக்கமானவர்களை மட்டும் நாம் தேர்தலில் தேர்ந்தெடுத்தால் போதும் நமக்கு சுதந்திரம் கிடைத்துவிடும். ஜனநாயகப்படி மிகவும் சுலபமாக நாம் வெற்றிப்பெற, மொழி சுதந்திரம் பற்றியும், அரசியல் தலைவர்களிடம் ஒழுக்கம் தேவை என்பதைப்பற்றியும், விழிப்புணர்வைப் படித்த இளைஞர்கள் ஒவ்வொருவரும் நண்பர்களிடம் ஏற்படுத்தினால் போதும், நமக்கு சுதந்திரம் கிடைத்துவிடும்.
எப்போது நம் மாநில மொழி மத்திய அரசின் ஆட்சி மொழியாக அங்கீகாரம் பெறுமோ அப்போதுதான் நாம் இந்தியர்கள். அதுவரை நாம் அடிமைகள்தான். அடிமை விலங்கை உடைத்திட வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வடநாட்டு தேசியக் கட்சிகளைத் தோற்கடிப்போம் சிறந்த தலைவர்களைக் கொண்ட மாநிலக் கட்சிகளை மட்டும் தேர்தலில் தேர்ந்தெடுப்போம். புதிய பாரதம் படைப்போம்.
in Politics