Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்

  • All Blogs
  • Politics
  • மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்
  • 8 June 2020 by
    Vijayakumaran
    நம்பிக்கையே வாழ்க்கை, நம்பிக்கை இல்லை என்றால் போராட்டம் இல்லை, போராட்டம் இல்லை என்றால் வெற்றி இல்லை, வெற்றி இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. அரசியல் அமைப்பு சட்டத்தை இந்த நாட்டை ஆள்பவர்களால் தான் மாற்ற முடியும் எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஒரு தனி மனிதனால் எப்படி முடியும் என்று நான் நினைத்து இருந்தால், “மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம்” என்ற புத்தகத்தை எழுதி இருக்க மாட்டேன், முடியும் என்ற நம்பிக்கையே என்னை எழுத வைத்தது எழுதிய புத்தகத்தை பல அரசியல் கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் மே 2013 அன்று தபாலில் அனுப்பி வைத்தேன், அதன் தொடர் வினையாக அப்போது முதல் மந்திரியாக இருந்த ஜெயலலிதா அவர்கள் அனைத்து மாநில மொழிகளையும் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்றுஇதுவரை எந்த முதல்வரும் வைக்காத கோரிக்கையை முதல்முறையாக மத்திய அரசுக்கு வைத்தார். பதவி இருந்தால்தான் இந்த சமுதாயத்தை வழிநடத்த முடியும் என்று சொல்வது பதவி ஆசையின் வெளிப்பாடு. ஜனநாயகத்தில் பதவியில் இல்லாத தனி மனிதனுடைய சிந்தனையும், செயலும் தான் இந்த சமுதாயத்தை வழிநடத்துகின்றது. தனிமனிதனின் அரசியல் புரிதலால் மட்டுமே இந்த சமுதாயத்தை உயர்த்த முடியும். எனவே நான் எழுதிய புத்தகத்தில் இருந்து ஒரு பகுதியை பதிவு செய்திருக்கின்றேன் படித்து நாட்டை வழி நடத்துங்கள். உங்களால் முடியும் ! உங்களால் தான் முடியும்!! முன்னுரை நாம் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள் ஆன பிறகும் நம்முடைய மாநில மொழியைப் பற்றிய விழிப்புணர்வு நம்மில் பலரிடம் இல்லையே என்ற ஆதங்கத்தில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன். இந்தியை எதிர்த்து நம் மாநிலத்தில் பல போராட்டங்கள் நாம் செய்துள்ளோம் அதனால் நமக்கும், நம் மொழிக்கும், எந்த பலனும் கிடைக்கவில்லை, இந்தி எழுத்தின் மீது கருப்பு சாயத்தை பூசியதுதான் நாம் கண்ட வெற்றி. இந்தி எதிர்ப்புப் போராட்டம் அரசியல் ஆக்கப்பட்டது, இதனால் பல மாநில அரசியல் கட்சிகள் தங்கள் செல்வாக்கை மக்களிடம் பெருக்கிக் கொண்டார்கள், இதை முறியடிக்க தேசிய கட்சி என்ற போர்வையில் இந்தி பேசும் வட மாநில கட்சிகள் நம் மாநில தலைவர்களையே பயன்படுத்தி இந்திக்கு ஆதரவாக இந்தியை கற்றுக்கொண்டால் மத்திய அரசு வேலை கிடைக்கும், இந்தியா முழுவதும் சென்று வேலை பார்க்கலாம், இதனால் உங்கள் வாழ்க்கை தரம் உயரும் என்று பிரச்சாரம் செய்தார்கள். இதைத்தொடர்ந்து இந்தியைக் கற்பதால் நல்லதா ?கெட்டதா? என்ற கேள்விதான் மக்களிடம் எழுந்ததே தவிர, ஏன் தென்மாநில மொழிக்கு, வடமாநில மொழியான இந்திக்கு நிகராக தேசிய ஆட்சி மொழி அந்தஸ்து கிடைக்கவில்லை என்ற கேள்வி எழவில்லை. முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா ? என்ற கேள்வியை நம்மிடம் பலர் கேட்டிருப்பார்கள், நாமும் பலரிடம் கேட்டிருப்போம். ஆனால் இந்தக் கேள்வியே தவறான கேள்வி என்பதை நாம் உணர்ந்து இருக்க மாட்டோம். முட்டை எங்கிருந்து வந்தது ?அல்லது கோழி எங்கிருந்து வந்தது ?என்று தான் கேள்வி இருக்க வேண்டும் அப்போதுதான் சரியான பதில் கிடைக்கும். அதாவது பரிணாம வளர்ச்சி என்ற அறிவியல் சார்ந்த பதில் நமக்கு கிடைக்கும். அறிவை பயன்படுத்தாமலேயே இரண்டில் ஒன்றை தான் நீ சொல்ல வேண்டும் என்று கேள்வி கேட்பது எப்படி அறிவற்ற செயலோ, அதுபோல்தான் பல மாநில மொழிகளில் இருக்க, மாநில மொழியான இந்தியை மட்டும் தேசிய மொழியாக அறிவித்துவிட்டு, இந்தியை கற்பதால் நன்மையா ?தீமையா ?என்று கேட்டால் நாம் என்ன சொல்வது !கேள்வியே தவறு அல்லவா!! இந்தி அல்ல ! எந்த மொழியைக் கற்றாலும் நல்லதுதான். ஒரு மொழியை நாமாக விரும்பி கற்பது என்பது வேறு, வேறு ஒரு மாநில மொழி நம்மை ஆட்சி செய்வது என்பது வேறு. பிற மாநில மொழிகள் அனைத்தும் நமக்கு சகோதர மொழிகள்தான் எனவே இந்தி மொழியை நாம் எதிர்க்க வேண்டியதில்லை. இந்திக்கு சமமாக நம் மாநில மொழியும் தேசிய ஆட்சிமொழி அங்கீகாரத்தை பெற வேண்டும், அப்போதுதான் நாம் உண்மையில் சுதந்திரம் பெற்றதாக பொருள். அந்த நாள் வரை இந்தி பேசும் வட மாநிலத்தவருக்கு நாம் அடிமைகள் தான் இதை அனைத்து மக்களும் உணர வேண்டும். மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் ஜனநாயக வழியில். இந்தியாவும், பாகிஸ்தானும், சுதந்திரம் பெறுவதற்கு முன்பு வரை ஒரே நாடாக தான் இருந்தது. சுதந்திரம் கிடைத்ததும் பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்து சென்றது, அதனால் அவர்கள் மொழியான உருதே அவர்கள் நாட்டின் ஆட்சி மொழியாக உள்ளது. நம்மை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்துவதற்கு முன்பு இந்தியா என்ற ஒரு நாடே இல்லை. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நாடாக அல்லது குறுநில மன்னர்களின் பல நாடாக தான் இருந்தது. ஆங்கிலேயரை எதிர்த்து சுதந்திர போராட்டம் நமது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் நடந்தது. சுதந்திரப் போராட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல ஆயிரம் மக்கள் தன் உயிரை கொடுத்ததால் தான் நாம் இந்த சுதந்திரத்தை பெற்றுள்ளோம்..இந்த சுதந்திரத்தை இந்தி மொழியை தாய் மொழியாக உள்ள வடநாட்டவர்கள் மட்டும் வாங்கவில்லை. இந்தியாவில் இந்தியை தவிர பிற மொழியை தாய்மொழியாக உள்ளவர்களும் சேர்ந்துதான் இந்த சுதந்திரத்தைப் பெற்றோம். பாகிஸ்தானை போல் தென் மாநிலத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் தனிநாடு கேட்டு இருந்தால் நம்முடைய தாய் மொழியும் தேசிய ஆட்சி மொழியாக இருந்திருக்கும். தென் மாநிலத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் ஒற்றுமையையே விரும்பியதால் நாம் மீண்டும் அடிமைகளாக ஆகி விட்டோம். நாம் அன்று ஆங்கிலேயரிடம் அடிமைகளாக இருந்தோம், இன்று இந்தியை தாய்மொழியாக உள்ள வட மாநிலத்தவர் இடம் அடிமைகளாக இருக்கின்றோம். ஆம் நாம் இன்னும் அடிமைகள் தான். நம்முடைய தாய் மொழியும் பிற மாநில மொழியை போல் நம் நாட்டை ஆள வில்லை என்றால் நாம் அடிமை தானே !தமிழ் நாட்டில் தமிழ் மொழியில் படித்து, பட்டம் பெற்று, மத்திய அரசு அலுவலகத்திற்கு வேலைக்குச் சென்றால் நமக்கு முன்னுரிமை இல்லை. அப்படி என்றால் நாம் இந்தியன் இல்லையா ?எனவே நம் மக்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்றுதான் பொருள். மொழிக்கு உயிர் இல்லை, நாம் மொழியை வளர்க்க வேண்டாம், மொழி தான் நம்மை வளர்க்க வேண்டும். நாம் வாழ வேண்டுமென்றால் தாய் மொழியைப் பாதுகாக்க வேண்டும். எங்கெல்லாம் நம் தாய் மொழிக்கு அங்கீகாரம் இருக்கின்றதோ அங்கெல்லாம் நாம் வாழ முடியும் என்று பொருள். நம் நாடு இந்தியா என்று சொல்கின்றோம் ஆனால் நம் தாய்மொழி இந்திய மொழி அல்ல, நம் மொழிக்கு அங்கீகாரம் இல்லை என்றால் அந்த மொழியைப் பேசுகின்ற மக்களுக்கும் அங்கீகாரம் இல்லை என்றுதான் பொருள். மாநில மொழிகள் அனைத்தும் இந்தியாவின் ஆட்சி மொழிகள் என்ற அங்கீகாரம் அனைத்து மாநில மொழிகளுக்கும் கிடைத்தால்தான் மத்திய அரசின் வேலைவாய்ப்பு அனைத்து மாநிலத்திற்கும் கிடைக்கும். தாய் மொழியில் உயர் கல்வியை கற்கும் நமக்கு, தாய்நாட்டில் நம் மொழிக்கு முன்னுரிமை இல்லை, மத்திய அரசு அலுவலகத்தில் வேலையில் சேர்வதற்கு கூட தகுதி இல்லை என்ற நிலையில் எல்லோரும் இந்த நாட்டு மன்னர்கள் என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது. இந்தியை தாய்மொழியாக உள்ள வட மாநிலத்தவர்கள் மட்டும் தான் இந்த நாட்டின் மன்னர்கள். இதுதான் உண்மை, மற்ற மாநிலத்தவர்கள் அனைவரும் அவர்களின் அடிமைகளே. தென் மாநில மொழிகளுக்கு மொழி சுதந்திரம் கிடைக்கவில்லை என்றால் இன்னும் 20 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்படுகின்ற கொடுமை தான் இந்தியாவில் உள்ள தென் மாநில மக்களுக்கும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. வட மாநிலத்தவர்கள் தென்மாநில தலைநகரத்தை ஆக்கிரமித்துக் கொண்டார்கள், அதற்கு காரணம் ரோட்டில் உள்ள மைல் கல்லில் ஆரம்பித்து, தபால் நிலையம், ரயில் நிலையம், வங்கி, இன்சூரன்ஸ் அலுவலகம், ஏர்போர்ட், வரை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்திலும் அவர்களின் தாய் மொழியான ஹிந்தி இருப்பதால் இந்தியை தாய்மொழியாக உள்ள வடநாட்டவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அவர்கள் குடியேறி வாழ்வது எளிமையாக உள்ளது.ஆனால் தென் மாநிலத்தவர், வட மாநிலத்துக்கு சென்று குடியேறவோ, வேலையில் சேரவோ முடியவில்லை ஏனென்றால் கடந்த 66 ஆண்டுகளாக நம் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது இதனால் நாம் வட மாநிலம் செல்ல முடியவில்லை. நம் மொழியும் தேசிய மொழியாக இருந்து இருந்தால் நமக்கு தகவல் பரிமாற்றம் கிடைக்கப் பெற்று இருப்போம், தென் மாநிலத்தவரும் பொருளாதாரத்தில் உயர்ந்து இருப்போம், நம்முடைய மாநில தலைநகரை வட நாட்டவருக்கு விற்றிருக்கமாட்டோம். தொடர்ந்து தென் மாநில மொழிகள் அடிமைப் படுத்தப் பட்டால் மீதமுள்ள நம்முடைய கிராமங்களையும் இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் வாங்கிவிடுவார்கள், பிறகு இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு தான் இந்தியா என்பார்கள் அப்போது நாம் எங்கு அகதிகளாக போவது, நம் நாட்டை விட்டு. தாய்மொழி நம்மை காக்கின்ற ஆயுதம், அதை நாம் பாதுகாத்தால் அது நம்மை காக்கும். மொழிப்பற்று என்று சொல்லிக்கொண்டு பதவி பற்றுடனும், பணப்பற்றுடனும் வாழ்கின்ற தலைவர்களிடம் இருந்தும், ஏழைக்கு உதவுகிறேன் என்று கூறிக் கொண்டு தன் சுகத்துக்காக பதவியை தக்க வைத்துக் கொள்ள பல தவறுகள் செய்யும் தலைவர்களிடமிருந்தும்,சாதி, மதம், சார்ந்த அரசியல் தலைவர்களிடமிருந்தும், தேசியக் கட்சிகள் என்று சொல்லுகின்ற வடநாட்டு அரசியல் கட்சிகளுக்கும், நாம் தேர்தலின் போது ஓட்டுப் போடாமல், மாநில மொழிக்கு தேசிய மொழி அந்தஸ்து பெற்றுத் தருவேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுக்கின்ற ஒழுக்கமான தலைவர்களை பெற்றுள்ள மாநில அரசியல் கட்சிக்கு ஓட்டுப் போட்டால், தென் மாநில கட்சியின் கூட்டாச்சி மத்தியில் உருவாகும், அப்போது பாராளுமன்றத்தில் அனைத்து மாநில மொழிகளும் இந்தி மொழிக்கு இணையான தேசிய மொழி தான் என்ற மசோதா நிறைவேறும். அந்த நாள் எந்த நாளோ, அந்த நாள் முதல் தான் நாம் அனைவரும் இந்தியர்கள். கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் செய்வோம் ! வெற்றி பெறுவோம்! கத்திக்கு பதில் நம்முடைய ஓட்டுரிமையை பயன்படுத்துவோம், வாழ்க மாநில மொழிகள் அனைத்தும், வளர்க அனைத்து மாநில மக்களும், அடிமைப்படுத்தினான் புரட்சி வெடிக்கும், அன்பு காட்டினால் வாழ்வு இனிக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மட்டுமல்ல இந்தி மொழியை தாய்மொழி அல்லாதவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் அனைத்து மாநில மொழியும் இந்திய மொழியாக ஒரு ஆண்டுக்குள் அகிம்சை வழியில், ஜனநாயக முறைப்படி அங்கீகரிக்கப்படும் என்பதில் ஐயமில்லை. இந்தியாவின் ஒருமைப்பாட்டை காக்க வேண்டும் என்றால் அனைத்து மாநில மொழியையும் சமமாக நடத்த வேண்டும். இது ஏன் தேசிய ஒற்றுமையை பற்றி பேசுகின்ற வட மாநில தேசிய கட்சிகளுக்கு தெரியவில்லை. தெரியப்படுத்துவோம் ஆனைத்து பாராளுமன்றத் தேர்தலிலும்.
    in Politics
    மனிதன் மாற மாட்டான்
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us