28 July 2023
by
Vijayakumaran
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் என் எல் சி யை எதிர்த்து முற்றுகை போராட்டம் நடத்தியது என் எல் சி க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு அதிக இழப்பீடு வாங்கி கொடுக்க அல்ல. வரும் காலத்தில் கடலூர் மாவட்டம் மக்கள் தண்ணீர் இல்லாமல், உணவு இல்லாமல் செத்து மடிந்து விடக்கூடாது என்பதற்காக தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த 60 ஆண்டு காலமாக நெய்வேலியை சுற்றி உள்ள பல கிராமங்களில் தண்ணீர் இல்லாமல் பல லட்சம் ஏக்கர் நிலங்களில் உள்ள மரங்கள் அனைத்தும் மேல் ஊற்று இல்லாமல் செத்து மடிந்து விட்டன, இந்த நிலைதான் அடுத்து இந்த மண்ணை நம்பி வாழும் மக்களுக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று உயர்நீதிமன்றத்தில் என்எல்சிக்கு எதிரான வழக்கில் என்எல்சி சார்பாக வாதாடிய வழக்கறிஞர் நீதிபதியை பார்த்து இங்கு நீங்கள் பயன்படுத்தும் AC,fan,light அனைத்தும் இயங்க மின்சாரம் முக்கியம் என்று கூறியிருக்கின்றார், அதற்கு நீதியரசர் அனைத்து AC,fan,light யை நிறுத்த சொல்லிவிட்டு மின்சாரம் இல்லாமல் நம்மால் திறந்த வெளியில் வாழ முடியும், ஆனால் உணவு இல்லாமல் வாழ முடியுமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
ராஜஸ்தான் போன்ற பாலைவன பூமியில் சுரங்கம் வெட்டி கரி எடுத்து மின்சாரம் தயாரிப்பதில் தவறு இல்லை. நமக்கு உணவை கொடுக்கும் விவசாய நிலத்தை அழித்து சுரங்கம் வெட்டினால் அதில் மீண்டும் விவசாயம் பண்ண பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மக்கள் மாற வேண்டும், மக்கள் மாறாமல் இங்கு எதுவும் சாத்தியமில்லை. தனக்கு எது நன்மையோ அதுவே சரி என்று எண்ணுகின்ற போக்கு அனைவரின் மனதிலும் ஆழமாக பதிந்து உள்ளது. இந்த எண்ணம் மாறாமல் மாற்றம் வராது.
சந்தை மதிப்பை விட பல மடங்கு பணம் நம் நிலத்துக்கு கிடைக்காதா என்று நிலம் கொடுத்தவர்களும், அரசியல் லாபத்திற்காக விவசாயிகளுக்காக பாட்டாளி மக்கள் கட்சியும் போராட்டம் நடத்துகின்றன. ஆனால் உண்மையில் பாதிக்கப்பட போகின்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் இங்கு வேடிக்கையாக உள்ளது.
விவசாய நிலத்தை அழித்து கரியை வெட்டி உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் முக்கியத்துவத்தை அன்புமணி அவர்கள் உட்பட அனைத்து விவசாயிகளும், பொதுமக்களும் உணர வேண்டும். மின்சாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசியல் லாபத்திற்காக கொண்டு வந்த அனைத்து இலவச மின் திட்டத்தையும் தடை செய்தால் போதும் என்எல்சி நிறுவனத்தை இன்றே முடிவிட்டு செழுமையான விவசாய பூமியாக நம்முடைய கடலூர் மாவட்டத்தை உருவாக்கி விடலாம்.
இலவசமாக கொடுக்கும் எந்த பொருளுக்கும் மரியாதை இருக்காது என்பதற்கு இலவச மின்சார திட்டங்களே சான்று. இலவச மின் இணைப்பு மூலம் இயங்கும் பல ஆழ்குழாய் கிணறுகளை நான் நேரில் பார்த்திருக்கின்றேன் 90% மோட்டார்கள் 24 மணி நேரமும் சரியாக நீரை பயன்படுத்தாமல் இயங்குகின்றது.
25 HP மோட்டார் இயங்க உற்பத்தி செய்யும் மின்சாரம் விவசாய நிலத்தை அழித்து வெட்டி எடுக்கும் கரியால் உற்பத்தி செய்யப்படுகின்றது என்று விவசாயிகளுக்காக போராடுபவர்களிடம் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?
தானே புயலால் பாதிக்கப்பட்ட பெரும் விவசாயிகளுக்கு மட்டும் (15 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் )தமிழக அரசு அரசியல் லாபத்திற்காக ஊரில் உள்ள செல்வந்தர்களுக்கு மட்டும் இலவசமாக ஆழ்குழாய் கிணறும், இலவச மின் இணைப்பும் கொடுத்தது.இதை பயன்படுத்தி 15 ஏக்கர் முந்திரிக்கும் 24 மணி நேரமும் நீரை இறைத்து உற்பத்தி செய்யும் முந்திரியின் விளையும் ரூபாய் 7000 தான். பக்கத்தில் மழையை நம்பி விவசாயம் செய்யும் சிறு விவசாயி உற்பத்தி செய்யும் முந்திரியின் விலையும் 7000 தான்.
விவசாயி என்றால் இருவரும் சமம் தான். இதில் நீதி இருக்கா ?இதில் சமத்துவம் இருக்கா ?என்பதை விவசாயிகளின் நலனுக்காக போராடுபவர்கள் சிந்திக்க வேண்டும்.
பெரும் விவசாயி 15 ஏக்கரில் ஒரு ஆண்டுக்கு உற்பத்தி செய்யும் முந்திரியின் அளவு 75 மூட்டைகள் இதன் இன்றைய சந்தை மதிப்பு 5,25,000/தான்.ஆனால் தமிழக அரசு இவருக்கு கொடுத்த இலவச மின்சாரத்தின் மதிப்பு,ருபாய்11,42,085/.
(25HP=0.746w\25HP=18.65kw/hr ஒரு நாளைக்கு ஒரு 25 HP இலவச மின் மோட்டார் 447 யூனிட் மின்சாரத்தை செலவு செய்கின்றது.வருடத்திற்கு 1,63,155 யூனிட் மின்சாரத்தை செலவு செய்கின்றது.)
ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆகும் செலவு தோராயமாக 7 ரூபாய் என்றால் ஒரு விவசாய இலவச மின் இணைப்புக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் குறைந்தது 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்சாரத்தை இலவசமாக கொடுக்கின்றது என்று பொருள்.ஆனால் இவர்கள் உற்பத்தி செய்யும் விவசாய பொருளின் மதிப்பு பயன்படுத்தும் மின்சாரத்தின் மதிப்பில் பாதி கூட இல்லை என்பது வேதனையாக உள்ளது.
இலவச மின்சாரத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யும் விவசாய பொருளுக்கும், இலவச மின்சாரம் இல்லாமல் உற்பத்தி செய்த விவசாய பொருளுக்கும் இங்கு ஒரே விலை தான்.இந்தக் கொடுமை எங்காவது உண்டா ?.
அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் கொடுக்க முடியாத அரசு ஒரு சிலருக்கு மட்டும் இலவச மின்சாரத்தை கொடுப்பது அனைவரும் சமம் என்ற அரசியலமைப்பு சட்டத்திற்கே எதிரானது.
விளைநிலங்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் விலை நிலங்களை அழிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.விலை நிலங்கள் நம்முடைய சொத்து அல்ல நமக்குப் பிறகு இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ இருக்கும் மக்களின் சொத்து.எனவே விளைநிலங்களைக் காக்க நீதித்துறையே முன்வந்து NLC நிறுவனத்தை மூடுவதே சிறந்தது.
மின்சாரத்தின் மதிப்பை மக்கள் உணர வேண்டும், மின்சார பயன்பாட்டாளர்கள் தங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் உற்பத்தி விலையை கொடுப்பதுதான் நீதி என்பதை உணர வேண்டும். நாம் பெரும் ஒவ்வொரு இலவசமும், இலவசம் பெறாதவர்களின் உழைப்பை சுரண்டும் செயல் என்று எண்ண வேண்டும்.
விலை மதிக்க முடியாத மின் சக்தியை மதிப்பில்லாமல் இலவசமாக கொடுப்பது நாட்டுக்கு கேடு !
விவசாய நிலங்களை காப்பாற்ற விவசாயிகளுக்கு கொடுக்கும் இலவச மின்சாரத்தை நிறுத்தினால் போதும் !
என்எல்சி யை மூடுவது மனித இனத்துக்கே நன்மை!
ஒரு சதவிகித விவசாயிக்கு மட்டும் இலவச மின்சாரம் கொடுப்பது அனைவரும் சமம் என்ற அரசியலமைப்பு சட்டத்திற்கே எதிரானது.
in Politics