31 December 2021
by
Vijayakumaran
ஜனநாயகம் என்பது ஜனங்களின் விருப்பப்படி ஆட்சியை அமைத்துக் கொள்வது தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே மக்களை ஆள வேண்டும் என்பதே ஜனநாயகம்.
மக்களின் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் உரிமை 18 வயது நிரம்பிய அனைவருக்கும் உண்டு, இதில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, படித்தவர், படிக்காதவர் என்ற எந்த வேறுபாடும் இல்லை.
ஆட்சியாளரை தேர்ந்தெடுப்பது அறிவு சார்ந்த விடையம் அல்ல, உரிமை சார்ந்த விடையம். அதனால்தான் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது.
அறிவு இல்லாத படித்தவர்களும், உயர்ந்த சாதியினரும் தன்னை அறிவாளி என்று நினைத்துக்கொண்டு படித்தவர்கள் மட்டும் தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் உரிமை கொடுத்தால் திறமையானவர்கள் நாட்டை ஆள்வார்கள் என்று சொல்வது ஜனநாயகத்தைப் பற்றிய புரிதல் இல்லாததே காரணம். திறமையானவர்கள் தான் நாட்டை ஆளவேண்டும் என்றால் ஆங்கிலேயரே நம்மை தொடர்ந்து ஆண்டு இருக்கலாமே !ஏன் சுதந்திரம் வாங்கி இருக்க வேண்டும் ?நம்மை நம்மில் ஒருவர்தான் ஆள வேண்டும் என்பதுதான் சுதந்திரத்தின் நோக்கம், இந்த நோக்கத்தை நாம் புரிந்து கொண்டு அதன்படி நம் ஜனநாயக உரிமையான வாக்குரிமையை பயன்படுத்துகின்றோமா என்றால் இல்லை என்பதே கடந்த கால அரசியல் வரலாறு.
தேசிய கட்சிகள் என்ற போர்வையில் வட இந்திய கட்சிகள் நம்முடைய வாக்குகளை ஏமாற்றி பெற்று நம்மை ஆண்டார்கள்.
சாதி ஒழிய வேண்டும் என்று தவறான கருத்தை மக்களிடம் பரப்பி அதன் மூலம் சமூக நீதியை அழித்து சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்கள் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று தமிழ் நாட்டை ஆண்டார்கள்.
சாதி, மதப் பிரிவினை என்பது ஒழிக்கக் கூடியவை அல்ல. பிரிவினை என்பது நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்ப மாறுபட்டு இருக்குமே தவிர பிரிவினை இல்லாத நாடே இந்த உலகில் இல்லை.
சாதி, மதப் பிரிவினை என்பது ஒருவருடைய விலாசமாக இருக்கலாமே தவிர, தகுதியாகவும், பெருமையாகவும் இருக்கக்கூடாது.சாதியால் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்துவது தான் ஒழியவேண்டும்.
தனிமனித வேற்றுமை என்பது இயற்கையின் விதி, இதை யாராலும் அழிக்க முடியாது. ஒரு வேற்றுமையை ஒழித்தால் வேறு ஒரு வேற்றுமை தானாக உருவாகும், எனவே வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் நாகரிகம். சாதி, மதம் ஒழிய வேண்டும் என்பது குள்ளநரிகளின் சூழ்ச்சி. குடும்பங்களின் கூட்டமைப்புதான் சாதி, சாதி அழித்தால் குடும்ப கலாச்சாரம் அழிந்துவிடும். குடும்ப கலாச்சாரம் இல்லாத மேலை நாடுகளில் சாதி இல்லாததில் ஆச்சர்யம் இல்லை, காரணம் குடும்ப கலாச்சாரம் தான் சாதியை கட்டமைக்கின்றது. ஒருவர் விரும்பி வேறு ஒரு சாதியைச் சேர்ந்த பெண்ணையோ, ஆணையோ திருமணம் செய்து கொள்வது தவறு இல்லை. ஆனால் சுயநலனுக்காக சாதி ஒழிய வேண்டும் என்பதுதான் சூழ்ச்சி.
“நம்மில் ஒருவர்தான் நம்மை ஆள வேண்டும்“ என்பதுதான் ஜனநாயகத்தின் தாரக மந்திரம். இதை நாம் அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மந்திரத்தை நீங்கள் மறக்க வேண்டும் என்பதற்காக பல கம்பிகட்டுகின்ற கதைகளை எல்லாம் அரசியல் கைக்கூலிகள் சொல்வார்கள் அதை நாம் எந்த நிலையிலும் உண்மை என்று நம்பிவிடக்கூடாது.
கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினரை தேர்ந்தெடுக்க நம் தெருவை சேர்ந்த அல்லது நம் சாதியை சேர்ந்த ஒருவரில் நேர்மையான ஒருவருக்கு வாக்களிக்கவேண்டும்.
எம்எல்ஏ, எம்பியை தேர்ந்தெடுக்க நம் ஊரை சேர்ந்த, நம் மாவட்டத்தை சேர்ந்த, நம் சாதியை சேர்ந்த, நம் மொழியை சேர்ந்த, நம் மதத்தை சேர்ந்த,நம் மாநில கட்சிகளின் வேட்பாளர்களில் நேர்மையான ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும்.
விழிப்புடன் இருந்தால் தான் ஜனநாயகத்தால் நம் உரிமையை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மக்கள் சாதி, மதம், மொழி, ஊர், மாநிலம் என்ற உணர்வுடன் வாக்களிக்கவேண்டும்.
வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள் சாதி, மதம், மொழி, மாநிலம் என்ற உணர்வுடன் செயல்படாமல் அனைவருக்குமாணவர்களாக அறிவின் ஆளுமையில் செயல்படவேண்டும்.
மக்கள் உணர்வின் ஆளுமையிலும்,
ஆட்சியாளர்கள் அறிவின் ஆளுமையிலும் செயல்படுவதே உண்மையான ஜனநாயகம்.
ஆட்சியாளர்கள் பார்வையில் வாக்களித்தவர்களும், வாக்களிக்காதவர்களும் சமமாகவே தெரிய வேண்டும் இதுவே ஜனநாயகம் மாண்பு.
தமிழர்களைப் பொறுத்த வரை காங்கிரஸ், பிஜேபி இரண்டுமே வட இந்தியர்களின் கட்சிதான், இரண்டு கட்சியுமே நமக்கு அன்னிய கட்சி தான் என்பதையும் அதில் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் அரசியல் கைக்கூலிகள் தான் என்பதையும் புரிந்து கொண்டு நம்மில் ஒருவருக்கு தான் நாம் வாக்களிக்க வேண்டும் என்ற உறுதியோடு அந்நியர்களை இனம் காண்பதே அரசியல் விழிப்புணர்வு.
in Politics