25 March 2021
by
Vijayakumaran
மக்களுக்கு அறிவுரை சொல்லும் ஆட்சியாளர்களும், நீதித்துறையும், தேர்தல் ஆணையமும், ஜனநாயகத்தை மதிக்கிறார்களா என்று முதலில் பார்ப்போம், அதன் பிறகு மக்களிடம் தனிமனித ஜனநாயக கடமையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சரியாக இருக்கும்.
1)மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MLA, MPக்கள் ஜனநாயகத்துக்கு எதிராக இட ஒதுக்கீடு சட்டம் இயற்றியது ஜனநாயக படுகொலை, இந்த ஜனநாயக கொடுமையை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லாத ஊடகங்கள் ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்று மக்களுக்கு அறிவுரை கூற தகுதியில்லாத ஊடகங்கள்.
2)குற்றம் செய்த ஒருவர் தண்டனை காலம் முடிந்து விடுதலையான பிறகும் மீண்டும் சிலகாலம் தேர்தலில் போட்டியிட நீதித்துறை தடை விதிப்பது என்பது குற்றவாளிக்கு கொடுக்கும் தண்டனை அல்ல, அது மக்களுக்கு கொடுக்கும் தண்டனை.
சட்டப்படி செய்த குற்றத்திற்கு தண்டனை கொடுக்க நீதிபதிக்கு உரிமை உள்ளதே தவிர தேர்தலில் நிற்கக் கூடாது என்று யார் ஒருவரையும் மக்களிடமிருந்து பிரிக்க ஜனநாயகத்தில் யாருக்கும் உரியுமை இல்லை. நல்லவர் யார், கெட்டவர் யார், யார் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதை மக்களே முடிவு செய்வார்கள் எனவே நீதித்துறை முதலில் ஜனநாயகத்தையும், மக்கள் தீர்ப்பையும் மதிக்க வேண்டும்.
3)தேர்தல் ஆணையம் இந்திய அரசியல் சாசனப்படி சாதி, மத பிரிவினையை மக்களிடம் ஏற்படுத்துகின்ற கட்சிகளை தடை செய்ய வேண்டும், ஆனால் தடை செய்ய துணிவு இல்லாத தேர்தல் ஆணையம் ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றது. ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்று சொல்லுகின்ற தேர்தல் ஆணையம், சாதி, மத பிரிவினை கட்சிகளுக்கு ஓட்டு போடாதீர்கள் என்ற விழிப்புணர்வை ஏன் மக்களிடம் ஏற்படுத்தவில்லை.
ஒரு வேட்பாளர் தன்னுடைய சாதி, மதத்தை சொல்லியோ அல்லது பணம் கொடுத்தோ ஓட்டு கேட்டால் அது தவறு, சமத்துவத்துக்கு எதிரானது. ஆனால் ஒரு வாக்காளர் வேட்பாளரின் சாதி, மதம் பார்த்து பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தால் அது தவறு இல்லை. காரணம் வாக்காளர் தன்னுடைய வாக்கை வேட்பாளருக்கு எந்த நோக்கத்திற்காகவும் போடலாம் என்பது ஜனநாயக உரிமை, வாக்காளரின் அறிவுக்கும், உணர்வுக்கும் எது சரி என்று தோன்றுகிறதோ அதுவே ஜனநாயகத்தின் தீர்ப்பு. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, இதை தவறு என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.
ஆட்சியாளர்களின், நீதித்துறையின், மற்றும் தேர்தல் ஆணையத்தின் தவற்றைச் சுட்டிக் காட்டியது போல் வாக்காளர்களின் தவற்றை என்னால் சுட்டிக் காட்ட முடியாது, காரணம் வாக்காளர்களின் செயல் என் பார்வையில் தவறாக தோன்றினாலும் அவர்கள் பார்வையில் சரி என்று தோன்றுவதே அவர்களின் செயலுக்கு காரணம்.
எந்த ஒரு வாக்காளரின் கருத்தையும் அல்லது விருப்பத்தையும் தவறு என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்பதே ஜனநாயகத்தின் மகத்துவம், அறிவால் அனைவரும் சமம் என்பதின் வெளிப்பாடே ஜனநாயகம். நான் அறிவால் உயர்ந்தவன் என்று யார் ஒருவரும் எண்ணிக்கொண்டு வாக்காளர்கள் யாருக்கும் உபதேசம் செய்யக் கூடாது என்பதை நான் அறிந்ததால் என்னுடைய அனுபவத்தை மட்டும் பகிர்ந்து கொள்கின்றேன்.
“வினை விதைத்தவன் வினை அறுப்பான் “ என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த சமுதாயத்தில் நாம் ஏற்படுத்தும் தாக்கம் மீண்டும் நம்மையே வந்தடையும் என்பது அறிவியல் உண்மை, விதி. இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
யார் நல்லவர் என்பதற்கான அளவுகோல் “நாம் செய்த செயலை நம் எதிரியும் செய்து அதனால் நமக்கு எந்த கெடுதலும் இல்லை என்றால் நாம் நல்லவர் தான் “ இந்த அளவுகோலுக்குள் ஒருவர் வராமல் நமக்கு நன்மை செய்வதால் மட்டும் நல்லவராக ஒருவர் இருக்க முடியாது.
சாதி, மத, மொழி பிரிவினை அரசியல் என்பது தேச ஒற்றுமைக்கு எதிரானது.மக்களை ஆள்பவர்கள் அனைத்து மக்களுக்குமாணவராக இருந்தால் மட்டுமே நாட்டில் அமைதியும், வளர்ச்சியும் இருக்கும். சாதி, மத, மொழி வேற்றுமை இல்லா சமத்துவம் அனைவர் மனதிலும் மலர்ந்தால் மட்டுமே இந்த பூமி புண்ணிய பூமியாக இருக்கும், இல்லை என்றால் கலவர பூமி தான்.
பெற்ற தாய், தந்தைக்கு உதவி செய்ய கணக்கு பார்க்கும் இந்த உலகில் சாதி, மதப் பற்றாளர்கள் போல் நடித்து மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்துவது பதவிக்காக தான் என்பதை நாம் புரிந்து கொண்டு இந்தத் தேர்தலில் சாதி, மதவாத கட்சிகளுக்கு வாக்கு போடாமல், மாநில உரிமைகளை பெறக்கூடிய, திறன் உள்ள உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு மாநில கட்சிக்கு மட்டுமே ஓட்டு போட்டால் மாநில நலனுக்கு நல்லது என்பது எனது கருத்து.
அரசியல் இன்று தொழிலாகி விட்டதாலும், பலருக்கு அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கு அரசியல் சார்பு இன்றியமையாத ஒன்றாகிவிட்டதாலும், பிழைப்புக்கும்,பாதுகாப்புக்கும்,கூலிக்கும் எந்த கட்சியில் பணி செய்தாலும் இன்றைய அரசியல் சூழலுக்கு தவறு இல்லை. எனவே உங்கள் வாக்கு பணத்தால் மதிப்பிட முடியாத ஒன்று என்பதால் வேட்பாளர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள், யாருக்கு வேண்டுமானாலும் தேர்தலில் வேலை செய்யுங்கள், ஓட்டு போடும்போது சாதி, மத பேதமில்லாமல் யாரால் அனைவருக்கும் நன்மையோ அவருக்கு உங்கள் வாக்கை போடுங்கள். ”இதுதான் இன்றைய அரசியல் தர்மம். ”
வாழ்க ஜனநாயகம் !
வாழ்க சமத்துவம் !!
வாழ்க சமுதாய ஒற்றுமை !!!
in Politics