Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    என் பார்வையில் அரசியல் (அரசியல் விழிப்புணர்வு கட்டுரை)

  • All Blogs
  • Politics
  • என் பார்வையில் அரசியல் (அரசியல் விழிப்புணர்வு கட்டுரை)
  • 25 January 2024 by
    Vijayakumaran
    அரசியல்தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது. கல்வி அறிவு இல்லாமல் கூட இந்த உலகில் ஒரு சமுதாயம் பாதுகாப்பாக, சிறப்பாக வாழ முடியும், ஆனால் அரசியல் அறிவு இல்லாமல் ஒரு சமுதாயம் பாதுகாப்பாக வாழ முடியாது என்பதற்கு சரித்திர நிகழ்வுகளே சான்று. முன்னோர்களின் வரலாற்றை நாம் தெரிந்து கொண்டால்தான் அவர்கள் பட்ட துன்பத்திலிருந்து சிறிதளவு அறிவை நாம் பெற முடியும். அரசியலால் அவர்கள் அனுபவித்த துன்பத்தை நாம் அறிவாக பெறவில்லை என்றால் நாமும், நம் சந்ததிகளும் வருங்காலத்தில் அரசியல் அறியாமையால் துன்பத்தை அனுபவிப்போம் என்பது உறுதி. ஒரு மனிதனுக்கு கண் எப்படி முக்கியமோ அது போல் அரசியல் அறிவும் ஒரு மனிதனுக்கு முக்கியம். தற்போதைய நம் நாட்டின் ஜனநாயக ஆட்சி முறையை நாம் அனுபவிக்க நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகள், பல நூறு தலைமுறைகளாக பட்ட துன்பத்தின் காரணத்தால் முன்னோர்களுக்கு கிடைக்கப் பட்ட அனுபவத்தால் உருவாகியதுதான் இன்றைய ஜனநாயக ஆட்சி முறை. மனிதன் பல ஆயிரம் ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்திருந்தாலும் கடந்த 75 ஆண்டுகாலமாக தான் ஜனநாயக ஆட்சி முறையில் சுதந்திரமாக வாழ்கின்றான். இந்த சுதந்திரமான ஆட்சி முறையில் நாம் வாழ்வதற்கு நம் முன்னோர்களின் பல லட்சம் உயிர் தியாகங்களே காரணம்.சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களை விட சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்த முன்னோர்களின் துன்பத்தை சிந்தித்தாலே அச்சமாக உள்ளது. சிறை கொடுமைகளை ஒவ்வொருவரும் அனுபவத்தால் தெரிந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் நாம் ஏன் அரசியலை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற புரிதல் ஏற்படும். இங்கு எதுவும் நிரந்தரமல்ல !அரசியல் மாற்றங்களால் சமகாலத்திலேயே நாமும் முன்னோர்களைப் போல் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடலாம், எனவே அரசியல் புரிதல் நம் வாழ்க்கைக்கு மிக மிக முக்கியமானது. நம் அறிவு தான், நம்மை, நாம் அறியாமலேயே நம்மை இயக்குவது போல், ஒவ்வொருவருடைய சிந்தனையும் தான் இந்த உலகையே இயக்குகின்றது. சிறுதுளி பெருவெள்ளம் என்பதை போல் நம் ஒவ்வொருவருடைய சிந்தனைக்கும் மிகப்பெரிய சக்தி உள்ளது. எனக்கு அரசியல் பிடிக்கவில்லை, அரசியல் ஒரு சாக்கடை, என் ஒருவரால் அரசியல் மாற்றம் ஏற்படுமா, பணம் உள்ளவர்களுக்கே அரசியலில் பதவி சாத்தியம். என்பதை போன்ற காரணங்களை சொல்லி அரசியலில் இருந்து விலகி இருப்பது அரசியல் அறியாமை. இந்த உலகை கடவுள் இயக்கவில்லை, தொடர்வினை என்ற தத்துவம் தான் இயக்குகின்றது. தொடர்வினை தத்துவத்தின்படி விதி உண்மை. இன்று நாம் அரசியலை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றால், தொடர்வினை தத்துவத்தின்படி நாளை நம் வாழ்க்கையை இழப்பது விதியாக இருக்கும். எனவே நம் வாழ்க்கையை பாதுகாக்க அரசியல் அறிவும், அரசியலில் ஈடுபாடும் மிக மிக முக்கியம். அரசியலில் “ஆடு நனைகின்றது என்று கவலைப்படும் ஓநாய் கூட்டம் “தான் அதிகம் எனவே அரசியல்வாதிகள் என்ன சொல்கின்றார்கள் என்பதை விட யார் சொல்கின்றார்கள் என்பதே அரசியலில் முதன்மையானது. இரண்டாவது தான் என்ன சொல்கின்றார்கள் என்பது. ஜனநாயகத்தின் பொருள் நம்மில் ஒருவரை நாமே தேர்ந்தெடுப்பது தான். எனவே நம்மில் ஒருவர் தான் நம்மை ஆள வேண்டும் என்பது ஜனநாயகத்தில் மிக மிக முக்கியமானது. நம்மில் ஒருவர் நம்மை ஆண்டால் தான் நம் சுதந்திரமும், உரிமைகளும் பாதுகாக்கப்படும். படித்தவர்களுக்கு மட்டும்தான் வாக்குரிமை கொடுக்க வேண்டும் அப்போதுதான் திறமைமிக்க அறிவாளியை தேர்ந்தெடுக்க முடியும் என்பது பல படித்தவர்களின் கருத்து. இது ஒன்றே சான்று அனுபவம் இல்லாத படிப்பு அறிவை கொடுக்காது என்பதற்கு. திறமை மிக்க, நேர்மையான அறிவாளியை தேர்ந்தெடுக்க அதிகாரியை நியமிப்பது போல் பத்து அறிவாளிகளை கொண்ட குழுவால் தேர்ந்தெடுக்கலாம், ஆனால் அது ஜனநாயகம் அல்ல. ஜனநாயகம் என்பது மக்களோடு மக்களாக இருப்பவரை மக்களே தேர்ந்தெடுப்பது தான்.அதனால்தான் ஆங்கிலேயர்கள் நம்மை விட படித்தவர்களாக இருந்தும் அவர்கள் நம்மை ஆள்வதை நாம் விரும்பவில்லை. எனவே அரசியலுக்கு வருபவர்களும் அரசியல் பேசுபவர்களும் தன்னுடைய மதத்தையும், சாதியையும், மொழியையும், மாநிலத்தையும் முதலில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். ஆனால் அது இங்கு மறைக்கப்படுகின்றது, காரணம் அரசியலில் ஆடு வேடம் போட்ட ஓநாய் கூட்டம் தான் அதிகம். (முதல் அரசியல் விழிப்புணர்வு ) அரசியலில் யார் ஓநாய் என்பதும், இனம் அறிவதும் தான். எனவே என்னை நான் அறிமுகப்படுத்திக் கொள்கின்றேன், பிறகு என்னுடைய கருத்தை பதிவு செய்கின்றேன். என்னுடைய சாதி -வன்னியர், மதம் -இந்து, தாய் மொழி -தமிழ், பூர்வீகம் -நெய்வேலி, தமிழ்நாடு. (இரண்டாவது அரசியல் விழிப்புணர்வு.) அரசியலில், யார் எதிரியிடம் சுயநலத்திற்காக விலை போய் இருக்கின்றார்கள் அல்லது பணைய கைதிகளாக இருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்வது தான். சில தொண்டர்கள் ஒருவேளை சோத்துக்கும், குடிக்கும் கைக்கூலியாக செயல்படுகின்றார்கள். சில பகுதி பொறுப்பாளர்கள் பதவிக்காக அரசியல் கூலியாக செயல்படுகின்றார்கள். பல பெரிய அரசியல் தலைவர்கள், கட்சித் தலைவர்கள் பணத்திற்கும், குறுக்கு வழியில் தான் சேர்த்து வைத்துள்ள பணத்திற்கு பாதுகாப்புக்காக தேர்தலுக்கு தேர்தல் கொள்கையை விட்டுவிட்டு பணத்துக்கு விலை போய் விடுகின்றார்கள். இளையராஜா, ரஜினிகாந்த் போல் பல திரைப்பட பிரபலங்கள் தன் உடைமைகளையும், தன் உறவுகளையும் சமுதாயத்தில் பாதுகாத்துக் கொள்ள பணைய கைதிகளை போல் அரசியல் கட்சிகளுக்கு அடிமைகளாகி விடுகின்றார்கள். இது அவர்களின் தவறல்ல காலத்தின் கட்டாயம், நான் அந்த இடத்தில் இருந்தால், நானும் என்னுடைய உயிர் வாழ்தலுக்கு அதை செய்து தான் ஆக வேண்டி இருக்கும். இன்று நான் எந்த அரசியல் கட்சியிலும், சாதி கட்சியிலும் உறுப்பினராகவோ அல்லது ஆதரவாளராகவோ இல்லாமல் இருக்கலாம், வருங்காலத்தில் நானும் ஏதேனும் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு அளித்தால் அந்த கட்சியிடம் நான் பணைய கைதியாகிவிட்டேன் என்றுதான் பொருள். எனவே நான் இப்பொழுதே தெரிவித்து விடுகின்றேன் அப்படி ஒரு நிலை எனக்கு ஏற்பட்டால் நான் சொல்வதை யாரும் கேட்காதீர்கள். (மூன்றாவது விழிப்புணர்வு மாநில சுயாட்சி மற்றும் மாநில உரிமை பாதுகாப்பு பற்றியது. ) இந்திய ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் தனி நாடு போன்றது, பல நாடுகளின் கூட்டு தான் இந்தியா. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி வரவு, செலவு. தனி பொருளாதாரம்,தனிமொழி, தனி இனம், தனி ஆன்மீக வழிபாட்டு முறை, தனி பண்பாடு என்று ஒரு நாட்டுக்கு உரிய அனைத்து தகுதியும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் உண்டு. மாநில சுயாட்சி என்பது ஒரு மாநிலத்தை அந்த மாநிலத்தை சேர்ந்த கட்சி தான் ஆட்சி செய்ய வேண்டும். மாற்று மாநில கட்சி தேசிய கட்சி என்ற பெயரில் வேறு ஒரு மாநிலத்தை ஆள முயல்வது ஜனநாயகத்திற்கும் இந்திய ஒற்றுமைக்கும் எதிரானது. மாநில உரிமை என்பது, ஒரு மாநிலத்தின் வரி வருவாய் அந்த மாநிலத்தின் வளர்ச்சி பணிக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும். மாறாக ஒன்றிய அரசால் வேறு மாநிலத்திற்கு நிதியை அதிகமாக கொடுத்தால் அது கஜினி முகமது 17 முறை இந்தியாவை கொள்ளையடித்ததற்கு சமம். மேலும் ஒரு மாநில மொழியை வேறு ஒரு மாநில மொழி ஆளுமை செய்ய கூடாது, அடிமைப்படுத்த கூடாது. அனைத்து மாநில மொழிக்கும் சமமான நிதி ஒதுக்கிட வேண்டும், உரிமை வழங்கிட வேண்டும்.அனைத்து மாநில மொழியும் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசின் அலுவல்மொழியாக பொது மொழியான ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்டும். ஒரு மாநில மொழியை மட்டும்,ஒரு மாநில கலாச்சாரத்தை மட்டும்,ஒரு மாநில ஆன்மீக வழிபாட்டு முறையை மட்டும், ஒன்றிய அரசு ஒட்டுமொத்த இந்தியாவின் அடையாளமாக அங்கீகாரம் கொடுப்பது ஜனநாயகத்திற்கும், இந்திய ஒற்றுமைக்கும் எதிரானது. நம்முடைய மாநில சுயாட்சி யையும், மாநில உரிமையையும், பொருளாதாரத்தையும், மொழி உரிமையையும், பண்பாட்டையும் பாதுகாக்க நம் மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு மட்டும்தான் நாம் வாக்களிக்க வேண்டும். வட இந்திய கட்சியான காங்கிரஸ், பிஜேபி போன்ற கட்சிகளுக்கு வாக்களிப்பது, ஆதரவளிப்பது என்பது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமம். காங்கிரஸ், பிஜேபி போன்ற வடமாநில கட்சிகளில் தமிழ்நாட்டு பொறுப்பாளராக இருப்பவர்களை நான் பார்க்கும் பொழுது, தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்கு எதிராக,வடமாநிலத்தவர்கள் நம்மை அடிமைப்படுத்த கூலிக்கு அரசியல் செய்பவர்களாக தான் எனக்கு தெரிகின்றது. நம்முடைய மண்ணையும், உரிமையையும் காக்க அரசியல் விழிப்புணர்வோடு நம் வாக்கு உரிமையை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் பல நூறு ஆண்டுகள் பின்னோக்கி சென்று துன்பத்தில் வீழ்ந்து விடுவோம். எனவே நம் வாக்குரிமை நம் உயிருக்கு சமமானது. அறிவு என்றால் என்ன ?விதி உண்மையா ?இந்த உலகம் கடவுளால் இயக்கப்படுகின்றதா ?கடவுளை வணங்கினால் நன்மை உண்டா ? போன்ற அனைத்து கேள்விக்கும் பதிலாக உலகில் முதல்முறையாக அறிவியல் பூர்வமாக நான் ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதி இருக்கின்றேன். என்னுடைய ஆய்வின்படி அறிவு என்பது ஒருவருக்குள் அனுபவத்தால் மட்டுமே வரும். அனுபவம் இல்லாமல் படிப்பதால், பார்ப்பதால், கேட்பதால் நாம் பெரும் தகவல் ஒருபோதும் அறிவாக மாறாது. நெருப்பில் நாம் ஒருமுறை யாவது சூடு பட்டு இருந்தால்தான் தகவலின் மூலம் நெருப்பின் கொடுமையை நாம் அறிவாக பெற முடியும்.எனவே நம் முன்னோர்கள் அடிமைகளாக இருந்த பொழுது அவர்கள் பட்ட துன்பத்தை நாம் அறிவாக பெற வேண்டும் என்றால், ஒரு மணி நேரமாவது சிறை கொடுமையை அனுபவித்திருக்க வேண்டும், குண்டர்களால் நம்முடைய உடமைகள் அபகரிக்கப்பட்டு இருக்க வேண்டும், உணவு இல்லாமல் பசியில் வாடி இருக்க வேண்டும், கலவரங்களில் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடி இருக்க வேண்டும், இது போன்ற பல கொடுமைகளின் மாதிரியையாவது அனுபவித்து இருந்தால் தான் ஜனநாயகம் இல்லா நாட்டில் முன்னோர்கள் அனுபவித்த கொடுமைகளை நம்மால் இன்று அறிவாக பெற முடியும். முன்னோர்களின் அறிவை நம்மால் பெற முடியாத சூழலில் நாம் வாழும் காரணத்தால் தான் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாமல் அரசியலை கேவலமாக பார்க்கின்றோம், அரசியல் அறிவு நமக்குத் தேவையில்லை என்று ஒதுங்கி இருக்கின்றோம், வாக்களிப்பதை கடமையாக நினைக்காமல் வேட்பாளர்களுக்கு செய்யும் சேவையாக பார்க்கின்றோம். இதற்கு காரணம் ஜனநாயகத்தைப் பற்றிய முக்கியத்துவமும், புரிதலும் நமக்கு இல்லாததுதான். (நான்காவது விழிப்புணர்வு ஆன்மீகம் ) ஆன்மீகத்துக்கும், அரசியலுக்கும் தொடர்பு இல்லை. ஆன்மீகம் தனிமனித நம்பிக்கை. அரசியல் ஒவ்வொரு மனிதனின் உரிமை. இரண்டையும் ஒன்றாக சேர்த்தால் அரசியலால் ஆன்மீகம் அழிந்துவிடும், ஆன்மீகத்தால் அரசியல் கட்சியும் அழிந்துவிடும். பிஜேபி மக்களின் அரசியல் அறியாமையை பயன்படுத்திக் கொள்கின்றது. வருங்காலத்தில் மக்கள் அரசியலையும், ஆன்மீகத்தையும் பிரித்து பார்க்கும் ஆற்றலைப் பெறும் பொழுது பிஜேபி மக்களால் நாடு முழுவதும் புறக்கணிக்கப்படும். எனவே அரசியல் விழிப்புணர்வும், ஆன்மீகம் பற்றிய புரிதலுக்கும் மக்களுக்கு தேவைப்படுகின்றது. கடவுள் இருக்கா ?இல்லையா ? இந்த பூமியையும், நம்மையும் கடவுள் இயக்குகின்றாரா ? மதத்திற்கு மதம் கடவுளும் தனித்தனியே இருக்கா ? மதம் கடவுளை வணங்குவதற்காக உருவாக்கப்பட்டதா அல்லது மனிதனிடம் நீதியை போதிக்க உருவாக்கப்பட்டத ? விதி உண்மையா ?சாஸ்திரங்களும், மந்திரங்களும் உண்மையா ? இது போன்ற ஆன்மீக சார்ந்த அனைத்து கேள்விகளுக்குமான பதில், நான் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ததில் கிடைத்த விடைகளில் இருக்கின்றது. நான் கடவுள் நம்பிக்கை உள்ள குடும்பத்தில் பிறந்தேன். அதனால் வள்ளலாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு என்னுடைய 25 வயதிலிருந்து முழுமையாக சைவத்திற்கே மாறிவிட்டேன் அந்த அளவிற்கு கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தேன். பத்து வயதில் இருந்து எனக்கு அறிவியல் மீது ஆர்வம் அதிகம் அதனால் இறைவனிடம் வேண்டும்பொழுது அறிவியலில் நான் புதியதாக ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்று கடவுளிடம் தினமும் வேண்டிக் கொள்வேன். இது என் வாழ்நாள் லட்சியம், காலங்கள் கடந்தன என்னுடைய 45 ஆவது வயதில் நான் சிந்தித்து கொண்டு இருக்கும் பொழுது இறந்த காலத்தின் தொடர்வினை தொடர்பு இல்லாமல் என்னால் புதியதாக எதையும் சிந்திக்கவே முடியவில்லை என்பதை உணர்ந்தேன். இதை உணர்ந்ததும் நான் என்னையே மறந்தேன். கடவுள் என்னுடைய 35 ஆண்டுகால வேண்டுதலை ஏற்று எனக்கு வரம் கொடுத்ததாகவே நான் உணர்ந்தேன். இறைவனை வணங்கி என்னுடைய நன்றியை தெரிவித்துவிட்டு நான் புதிதாக பெற்ற அறிவை அறிவியலால் ஆய்வு செய்ய தொடங்கினேன். ஆன்மீகத்தில் அறிவை ஒதுக்கி வைத்து விட வேண்டும் அப்போதுதான் தன்னை மறந்த நிலைக்கு செல்ல முடியும். அறிவியலில் ஆன்மீகம், உணர்வு இரண்டையும் ஒதுக்கி வைத்து விட வேண்டும் அப்போதுதான் அறிவுபூர்வமாக சிந்திக்க முடியும். உணர்வு ஆன்மீகத்துக்கான வழி, அறிவு அறிவியலுக்கான வழி. என்னுடைய ஆய்வின் முடிவு ஒரு மனிதனின் செயல் அவனுக்கு கட்டுப்பட்டு இல்லை என்பதும், இறந்த கால நிகழ்வுகளின் தொடர்வினையே இன்றைய அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணம் என்றும், தொடர்வினை தத்துவத்தை மீறி கடவுளின் செயல் என்று இந்த உலகில் எதுவும் நடக்கவில்லை, நடக்கவும் சாத்தியமில்லை அதனால் கடவுள் இல்லை என்று என்னுடைய ஆய்வு அறிவியல் பூர்வமாக தெளிவு படுத்தியது. என்னுடைய ஆய்வின் உண்மையை என் உணர்வால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, சிறிது நேரம் என்னுடைய உணர்வும், அறிவும் செயல்பட முடியாமல் அமைதியாக இருந்தன. அந்த ஒரு கணம் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இந்த உலகில் எந்த ஒரு ஆன்மீகவாதியும், அறிவியலாளர்களும் அனுபவித்திருக்கவே மாட்டார்கள். “நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே “என்று சிவனைப் பார்த்து புலவர் நக்கீரன் சொன்னது போல் என்னுடைய அறிவு என்னுடைய உணர்வை பார்த்து நீ ஏற்றுக் கொண்டாலும் ஏற்காவிட்டாலும் கடவுள் இல்லை என்பதுதான் உண்மை என்று உறுதியாக சொல்லிவிட்டது. அதற்கு என்னுடைய உணர்வு கேட்டது என்னுடைய அறிவு இடம் 35 வருட தவத்தால் எனக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட அறிவு நீ,நீயே கடவுள் இல்லை என்று சொல்லலாமா என்று கேட்டது. அதற்கு என்னுடைய அறிவு சொன்னது 35 ஆண்டு தவத்தால் நான் உனக்கு கிடைக்கப்பெற்றது உண்மைதான் ஆனால் அது கடவுளால் கொடுக்கப்படவில்லை, தொடர்வினை எனும் இயற்கையின் செயலால் கொடுக்கப்பட்டது. தொடர்வினையின் படி நீ என்னவாக ஆக வேண்டும் என்று நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய், ஆனால் நீ எதை நினைக்க வேண்டும் என்பதை இறந்த காலத்தின் தொடர்வினை தான் தீர்மானிக்கும் என்றது. என்னுடைய ஆய்வின் மூலம் நான் தெரிந்து கொண்டது, இந்த பிரபஞ்சம் தொடர்வினை தத்துவத்தில் தான் இயங்குகின்றது, இதில் மனிதனின் பிறப்பு, இறப்பு சிந்தனை, செயல் அனைத்தும் உட்பட்டது. மனிதன் கல்லை போல் தான் வெளிசக்தி இயக்கினால் தான் இயங்க முடியும். இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு அணுவின் அசைவிற்கும் எதிர்வினை உண்டு. ஒவ்வொரு அணுவின் அசைவும் தொடர்வினை எனும் இயற்கையின் சக்தியால் கண்காணிக்கப்படுகின்றது, எதிர்வினைக்காக. நம்முடைய ஒவ்வொரு அசைவையும், செயலையும், சிந்தனையையும் தொடர்ந்து வீடியோ எடுப்பது போல் தொடர்வினை எனும் இயற்கையின் சக்தி நம்மை பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றது, எதிர் வினைக்காக. இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. ஆன்மீகத்தில் பாவ மன்னிப்பு என்ற கதைகள் உண்டு, இயற்கையிடம் அதற்கு வாய்ப்பே இல்லை. நாம் எதை செய்கின்றோமோ அதற்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும். கடவுளை பற்றிய ஆய்வுக்குப் பிறகு எனக்குள் ஏற்பட்ட மாற்றங்கள், கடவுள் நம்பிக்கை இருந்தபோது கடவுள் நம்மை பார்க்கின்றார் என்ற உணர்வோடு நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் இருந்தேன். ஆய்விற்குப் பிறகு கடவுள் இல்லை ஆனால் தொடர்பினை எனும் இயற்கையின் சக்தி ஒவ்வொரு அணுவின் அசைவையும் பார்த்துக்கொண்டு இருக்கின்றது எதிர்வினைக்காக என்று அறிவால் நான் புரிந்து கொண்டபிறகு ஒருவித பயத்தோடு மிகவும் நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் இப்பொழுது இருக்கின்றேன். கடவுள் இல்லை என்பதை நான் உணர்ந்த உடன் அனைத்து கோயில்களும், தேவாலயங்களும், மசூதிகளும் எனக்கு சமமாக தான் தெரிகின்றன, காட்சி பொருளாக. மேலும் கடவுள் நம்பிக்கையை விட இயற்கையை பற்றிய புரிதலே உலக மக்கள் அனைவரிடத்திலும் நல்லிணக்கத்தையும், நேர்மையையும், ஒழுக்கத்தையும் உருவாக்கும் என்று நம்புகின்றேன். அரசியல் லாபத்திற்காக கடவுளின் பெயரால் மதங்களுக்கு இடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தி பிரித்தாலும் சூழ்ச்சியால் அதிகார சுகத்தை 10 ஆண்டுகளாக அனுபவித்து வரும் பிஜேபி அரசியல்வாதிகளுக்கு மதவெறி பிடித்து விட்டது. பிஜேபி மத வெறியர்களின் அடுத்த இலக்கு தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் பகுத்தறிவாளர்களின் கையில் இருக்கும் பெரியாரின் கைத்தடி (கடவுள் மறுப்பு கொள்கை )படை எடுத்து வரும் மத வெறியர்களை விரட்டி அடித்து விடுமா என்றால் சாத்தியமே இல்லை. காரணம் கடவுள் மறுப்பை பகுத்தறிவாளர்களே பலரும் நம்பவில்லை. கடவுள் இல்லை என்ற நம்பிக்கை பகுத்தறிவாகாது ! கடவுள் இல்லை என்ற புரிதல் மட்டுமே பகுத்தறிவின் வெளிப்பாடு ! என்னுடைய பார்வையில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடம் ஆன்மீகம் பற்றிய புரிதல் இல்லை. கடவுள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவாளர்களிடம் பகுத்தறிவு பற்றிய புரிதல் இல்லை. ஏன் கடவுள் இல்லை ?என்பதை என்னுடைய ஆய்வை படித்து புரிந்து கொண்டு அதன் பிறகு கடவுள் இல்லை என்று சொன்னால் தான் அது பகுத்தறிவுக்கு அழகு. கடவுள் இல்லை என்ற ஒற்றை வார்த்தை பகுத்தறிவாகாது. பாய்ந்து வரும் வெறிநாய் கூட்டத்தை ஒருபோதும் பெரியாரின் கைத்தடியால் விரட்ட முடியாது. நாய்க்கு எலும்பு துண்டு போடுவது போல், கடவுள் பற்றிய அறிவு இல்லாமல் மதவெறிபிடித்து வரும் கூட்டத்திற்கு கடவுளை பற்றிய அறிவை கொடுத்தால், அறிவு பசியை தீர்த்துக் கொண்டு ஏவியவர்களையே எதிர்க்க சென்று விடுவார்கள். எனவே பகுத்தறிவாளர்கள், ஏன் கடவுள் இல்லை, எந்த அடிப்படையில் இந்த உலகம் இயங்குகின்றது என்பதை முதலில் புரிந்து கொண்டு, தான் பெற்ற அறிவை மதவாதிகள் இடம் கொண்டு சென்றால் மட்டுமே தமிழகத்தை மதவெறியர்களிடம் இருந்து காக்க முடியும். (ஐந்தாவது விழிப்புணர்வு சாதியை பற்றியது) தமிழ்நாட்டை சேர்ந்த யாருக்கு வாக்களிப்பது, ஆதரவு கொடுப்பது ? முதலில் கட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும், பிறகு வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். கட்சியை தேர்வு செய்வதிலும், வேட்பாளரை தேர்வு செய்வதிலும் சாதியையும்,மதத்தையும் வாக்காளர் பார்க்க வேண்டுமா என்றால் அவசியம் பார்க்க வேண்டும். சாதிக்கும், மதத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை, இரண்டும் ஒருவித பிரிவுதான். உணவுக்கு உப்பு எப்படி தேவையோ அது போல் கட்சியை தேர்வு செய்வதிலும், வேட்பாளரை தேர்வு செய்வதிலும் சாதியும், மதமும் மிக மிக முக்கியம். உப்பை மட்டுமே தனியாக சாப்பிட முடியாது அதுபோல் உணவை உப்பில்லாமலும் உண்ண முடியாது, எனவே வேட்பாளர் தேர்வில் சாதியும், மதமும் அடிப்படைத் தகுதி. தேர்தலில் சாதியையும், மதத்தையும் பார்த்து வேட்பாளரை தேர்வு செய்தால் தான் சமூகநீதி அடிப்படையில் அரசியல் அதிகாரம் அனைவருக்கும் கிடைக்கும். சாதி என்பது குடும்பங்களின் குடும்பம். சாதி ஒரு இனத்தின் அடையாளம். குடும்ப உறவுகள் சிதைந்தால் சாதி அழிந்துவிடும். சாதி அழிந்தால் குடும்ப உறவுமுறை நாகரீகம் அழிந்துவிடும். குடும்ப நாகரீகம் அழிந்தால் ஒழுக்கம் இல்லாத கற்கால மனிதர்களாகிவிடுவோம். சாதி ஒழிய வேண்டும் என்பது சிறுபான்மை சாதியில் பிறந்த அரசியல்வாதிகளின் சூழ்ச்சி ! அரசியலில் சமூகநீதி மறுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சாதி ஒழிய வேண்டும் என்ற கருத்து மக்கள் மனதில் திணிக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு இடையே வேற்றுமை ஒழிய சாதி ஒழிய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் சாதியை ஒழித்தால் மனிதர்களுக்கு இடையில் உள்ள வேற்றுமை போய்விடும் என்று சாதி ஒழிய வேண்டும் என்று சொல்பவர்கள் மக்களிடம் தெளிவுபடுத்த முடியுமா? சாதியை ஒழித்தால் மத வேற்றுமை போய்விடுமா? சாதியை ஒழித்தால் ஏழை, பணக்காரன் வேற்றுமை போய்விடுமா ? சாதியை ஒழித்தால் படித்தவன், படிக்காதவன் வேற்றுமை போய்விடுமா ? சாதியை ஒழித்தால் எளியவன், வலியவன் வேற்றுமை போய்விடுமா ? சாதியை உழித்தால் பக்கத்து வீட்டுக்காரனுக்கும், நமக்கும் உள்ள வேற்றுமை போய்விடுமா ? சாதியை ஒழித்தால் இரண்டு ஊர்க்கார்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை போய்விடுமா ? வேற்றுமை தான் மனிதனின் அடையாளம். ஒவ்வொரு மனிதனும் தன்னை மற்றவர்களிடமிருந்து வேற்றுமைப்படுத்திக் கொள்ளவே விரும்புகின்றான். சாதியை ஒழித்தால் மனிதர்களிடையே உள்ள வேற்றுமை அனைத்தும் ஒழிந்து விடும், வேற்றுமை இல்லா சமுதாயம் உருவாகும் என்பது பொய். எனவே வேற்றுமை ஒழிய, சாதி ஒழிய வேண்டும் என்பது பெரும்பான்மை சாதியின் சமூக நீதி உரிமையை பறிக்க செய்யப்பட்ட மூளை சலவையே. சாதி ஒழிய வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை, சாதி தீண்டாமையும், சாதி வன்கொடுமையும் தான் ஒழிய வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் தெளிவாக சொல்கின்றது எனவே சாதிகளுக்கு இடையில் சமத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டுமே தவிர மாறாக சாதி ஒழிய வேண்டும் என்று சொல்வது அரசியல் சூழ்ச்சி. சமூக நீதிக்கு எதிராக சிறுபான்மை சாதியினர் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதற்காகவே சாதி ஒழிய வேண்டும் என்று பிரச்சாரத்தை செய்து வருகின்றார்கள். இவர்களின் சூழ்ச்சி தெரியாமல் தன்னை யாரும் பிற்போக்குவாதி என்று நினைத்து விடக்கூடாது என்று அனைவரும் சாதி ஒழிய வேண்டும் என்று நடிக்கின்றார்கள். எலியை ஒழிக்க வீட்டை கொளுத்தியவர்கள் இங்கு யாராவது உண்டா ? சாதி சமத்துவத்திற்காக சாதியை ஒழிக்க வேண்டும் என்பது சரியா ? சரி என்றால் மத சமுத்துவத்திற்காக மதம் ஒழிய வேண்டும் என்று யாரும் ஏன் சொல்வதில்லை. சாதி என்பது குடும்பத்தின் முகவரி, முகவரியை சொன்னாலே சிலருக்கு பிடிக்கவில்லை என்பதுதான் சாதி வெறி.இந்த சாதிவெறி தான் ஒழிய வேண்டும். ஜனநாயகத்தில் நம்முடைய உரிமைகளை பாதுகாக்க நம்மில் ஒருவரை தான் நாம் தேர்வு செய்ய வேண்டும். எனவே ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுக்க சாதி, மதம், மொழியை அடிப்படை தகுதியாக வைத்துக்கொண்டு, அடிப்படை தகுதி உள்ள வேட்பாளரில் யார் நேர்மையான, ஒழுக்கமான திறமை மிக்க, அனைத்து சாதி, மதத்தினரிடமும் நல்லிணக்கத்தை பேணக் கூடிய ஒருவரை தேர்வு செய்வதே சரியான செயலாக இருக்கும். வாக்காளர் சாதி, மதம் பார்த்து வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம், ஆனால் வேட்பாளர் சாதியால், மதத்தால் மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்கை பெற முயற்சி செய்தால் அது தேர்தல் விதிக்கு எதிரானது. அரசியல் கட்சியை தேர்வு செய்வதற்கு சாதிகளுக்கு இடையே, மதங்களுக்கு இடையே வெறுப்பை விதைக்காத நம் மாநில கட்சிகளை மட்டும் அடிப்படை தகுதி உடைய கட்சியாக தேர்ந்தெடுத்து விட்டு, அதில் எந்த கட்சி வேட்பாளர் தேர்வில் சமூக நீதியை பின்பற்றக்கூடிய, மாநில உரிமைகளை போராடிப் பெறக்கூடிய வல்லமை உள்ள சாதி, மத நல்லிணக்கத்தை பேணிக் காக்கக்கூடிய நேர்மையான, வலிமையான தலைவரை கொண்ட அரசியல் கட்சியை தேர்வு செய்வதே சரியானதாக இருக்கும். அரசியல் விழிப்புணர்வோடு இருப்போம் ! அரசியல் நம் உயிருக்கு நிகரானது ! நம் ஜனநாயக உரிமையான மொழி உரிமையை அரசியல் விழிப்புணர்வால் மீட்டெடுப்போம் !
    in Politics
    புதிய நாடாளுமன்ற கட்டிடம்
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us