1 June 2019
by
Vijayakumaran
யார் நாட்டை ஆண்டால் எனக்கென்ன ? இன்று நான் உழைத்தால்தான் சாப்பாடு என்று அலுப்போடு சொல்லும் அடிதட்டு உழைப்பாளி முதல், அரசியலை முழுமையாக கரைத்து குடித்து விட்டு இந்த நாட்டை ஆளும் அரசியல் தலைவர்கள் வரை, அனைவருக்குமான விழிப்புணர்வு கட்டுரை இது. நாட்டு மக்கள் அனைவரின் நலனுக்காக இந்த கட்டுரையை நான் எழுத வேண்டியது என்னுடைய கடமையாக எண்ணி எழுதி உள்ளேன். எனவே வாசகர்கள் படித்ததும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள், காரணம் நாம் நல்லவராக இருப்பதை காட்டிலும் நம்மை சுற்றியுள்ளவர்கள் நல்லவராக இருந்தால் மட்டுமே நமக்கு அதிக பாதுகாப்பு. நான் இந்தக் கட்டுரையை சாதி, மதம், கட்சி பாகுபாடு இன்றி அறிவியலையும், சரித்திரத்தையும், ஆய்வு செய்து நடுநிலையோடு பதிவு செய்து இருக்கின்றேன்.
அறிவியலின் பொருள் இயற்கையின் இயல்பை அறிதல் அல்லது இயற்கையை புரிந்து கொள்ளுதல் என்று பொருள். இயற்கையின் இயல்பு அனைத்து வினைக்கும் எதிர்வினை உண்டு என்பதுதான், இதிலிருந்து ஒரு அணுவும் தப்ப முடியாது என்ற அறிவியல் உண்மையை முதலில் புரிந்து கொள்ளுங்கள், அல்லது நம்புங்கள், அப்போதுதான் மற்றவர்களை நாம் வஞ்சிக்காமல் தானாக முன்வந்து நம் தவறுகளை திருத்திக்கொள்ள முடியும்.
உலக சரித்திரத்தோடும் இந்தியாவின் சரித்திரத்தோடும் அறிவியலை இனைத்துப் பார்த்தால், வரும் நாட்களில் நாமும், நம் அரசியல் கட்சிகளும் எப்படி செயல்பட்டால் நல்லது என்று புரிய வரும். ஆம் சரித்திரம் நமக்கு சொல்லும் பாடம் சூழ்ச்சிகளும், வஞ்சகமும், நாட்டை ஆளும்போது, புரட்சி தானாகவே உருவாகி நாட்டை மீட்டெடுத்ததாக தான் வரலாறு உள்ளது.
மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும், இந்த நாட்டை ஒருவர் ஆண்டால் புரட்சி வெடிக்கும் என்பது இயற்கையின் விதி.
நடந்து முடிந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் தமிழ் நாடு இந்த நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஜனநாயக விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டை அமைதிப் பூங்கா என்றும், ஆன்மிக பூமி என்றும், தமிழர்கள் பகுத்தறிவாளர்கள் என்றும், உலக மக்கள் தமிழர்களை பாராட்ட யார் காரணம்? சரித்திரத்தை ஆராய்ந்தால் புரியவரும். ஆம், சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றில் தமிழ்நாட்டில் மட்டும்தான் சாதியாலும், மதத்தாலும், மக்களைப் பிரித்து அரசியல் செய்யாத அரசியல் தலைவர்களால் ஆட்சி செய்யப்பட்டது, செய்யப்படுகின்றது என்று. அதனால்தான் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக உள்ளது.
திராவிட கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சியை பற்றி பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும், தமிழ்நாட்டில் சாதி, மத, நல்லிணக்கத்தை சிறப்பாக செயல்படுத்தியதால் நாம் திராவிட கட்சிகளை பாராட்டியே ஆகவேண்டும். ஜனநாயக நாட்டை பெரும்பான்மையினர் தான் ஆள வேண்டும் என்பது அல்ல. சிறுபான்மையினர்களும் ஆளமுடியும் என்ற நிலை ஒரு நாட்டில் இருந்தால்தான் அந்த நாடு உண்மையான ஜனநாயக நாடு. அந்த நாட்டு மக்கள் இயல்பாகவே சகோதரத்துவத்துடனும், அமைதியாகவும்,வாழ்வார்கள். அதற்கு எடுத்துக்காட்டு உலகிலேயே தமிழ்நாடுதான்.
ஜனநாயக இந்தியாவில் அனைவரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற நம்பிக்கை அனைத்து சாதியினரிடமும், மதத்தினரிடமும், மொழியினர்இடமும், இயல்பாகவே இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை சாதியாலும், மதத்தாலும், மொழியாலும், பொய்யாக்கப்பட்டால், பாதிக்கபட்டவர்கள் இந்த நாட்டுக்கும், சட்டத்திற்கும், எதிராக செயல்பட ஆரம்பிப்பார்கள்.வெறுப்பால் இந்த சமுதாயத்தையே அழிக்கவும் துணிந்து விடுவார்கள், அவர்கள் தான் தீவிரவாதிகள்.
பதவி சுகத்துக்காக பிஜேபி பாபர் மசூதியை இடித்து இரண்டு மதங்களுக்கு இடையே வெறுப்புணர்வை தூண்டி பல ஆண்டுகளாக நாடு முழுவதும் பல இனக் கலவரங்களில் பல அப்பாவி மக்களை கொன்று குவித்து அதன் பலனாக பெற்றதே 2019 தேர்தல் வெற்றி.இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி அல்ல. மத தீவிரவாதத்துக்கு கிடைத்த வெற்றி !சாதி பிரிவினைக்கு கிடைத்த வெற்றி!
அறிவியல் படி இந்த வெற்றியின் எதிர்வினை வட இந்தியர்களுக்கு மிக மோசமானதாக இருக்கும். பிரிவினை அரசியலால் பல நாடுகள் அழிந்துதான் உள்ளதே தவிர வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.அழிவை நோக்கி தான் வட இந்திய அரசியல் பயணிக்கின்றது என்பது இந்த தேர்தலில் தெளிவாக தெரிகின்றது. பிரிவினை அரசியல் ஆரம்பத்தில் அரசியல்வாதிகளுக்கு நன்மையைப் போல் இருந்தாலும் காலப்போக்கில் அனைத்து மக்களுக்கும் அது கேடாக தான் முடியும். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும், மக்களும், இதை தெளிவாக புரிந்து கொண்டு மாற்று மதத்தினர் இடையேயும்,மாற்று சாதியினர் இடையேயும், வெறுப்புணர்வை பொதுவெளியிலும், இணையத்திலும், வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. சாதி, மத பிரிவினை அரசியல் செய்யும் பிஜேபி, முஸ்லிம் லீக், பாமக,விசி,போன்ற அரசியல் கட்சிகளுடன் திராவிட கட்சிகள் இனி கூட்டணி வைத்துக் கொள்ளாது என்று அறிவித்து இந்திய அரசியலையே மாற்ற வேண்டும். அதற்கான தகுதி இந்தியாவில் சமூக நீதியைக் காக்கும் திராவிட கட்சிகளுக்கே உள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே மக்களை ஆள வேண்டும் என்பது ஜனநாயகம். இந்த ஜனநாயகம் தவறாக பயன்படுத்தப் பட்டால் சர்வதிகார ஆட்சியை விட கொடுமையானதாக மாறிவிடும்.
பெரும்பாலானவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் ஆள வேண்டும் என்பது சரியான ஜனநாயகம்.பெரும்பான்மையினர் களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்த நாட்டை ஆண்டால் அது தவறான ஜனநாயகம். பெரும்பான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் என்று மக்களைப் பிரித்து அதன் மூலம் ஒரு கட்சி இந்த நாட்டை ஆட்சி செய்தால் அது ஜனநாயக ஆட்சியும் அல்ல, அந்த நாடு ஜனநாயக நாடும் அல்ல என்பதை ஒவ்வொரு மக்களும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
சிறுபான்மையினர்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை குறையும் போது புரட்சியும், கலவரமும் வெடிக்கின்றது. 1965இல் வட இந்தியர்கள் அவர்களின் இந்தி மொழியை தென்னிந்திய சிறுபான்மை மாநிலங்கள் மீது திணித்த போது புரட்சி வெடித்தது. இதில் பல நூறு பேர் இறந்தனர்,நாடு போர்க்களம் போல மாறியது என்பது வரலாறு. இந்த நிலை மீண்டும் மொழி, மத, சாதி பிரிவினையால் மீண்டும் ஏற்படுவதற்கான சூழல் மிகவும் அதிகமாக பிஜேபி அரசால் உள்ளது.
வரலாற்றையும், அறிவியலையும், ஜனநாயகத்தையும், அரசியல் கட்சிகளும், மக்களும் புரிந்து செயல்பட்டால் மட்டுமே நாட்டில் அமைதி நிலவும்.
அன்று ஜனநாயக போர்வையில் வட இந்தியர்கள் மொழியால் தென்னிந்தியரை அடிமைப்படுத்தினர். இன்று மதத்தாலும், ஜாதியாலும், நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையினரை அடிமைப்படுத்த முயல்கின்றனர்.
ஒரு விரல் புரட்சி பலன் அளிக்கவில்லை என்றால் பத்துவிரல் புரட்சி பலன் கொடுக்கும் என்பது வரலாறு.
சட்டம் போட்டு பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை அடிமைப்படுத்தினால், திட்டம் போட்டு சட்டத்தை உடைத்தெறிவது தான் புரட்சி!
in Politics