ஆடு நனைகின்றது என்று ஓநாய் ஏன் வருத்தப்படுகின்றது?
9 September 2021by
Vijayakumaran
ஆடு நனைகின்றது என்று ஓநாய் ஏன் வருத்தப்படுகின்றது? ஆடு மீது உள்ள அக்கறையால் அல்ல !அதை கொன்று சாப்பிடுவதற்காகவே என்பதை போல், தமிழ்நாட்டில் தமிழை தாய் மொழியாக இல்லாதவர்கள் தமிழர்களைப் போல் தமிழில் பேசினாலும் அவர்களில் பலர் தமிழை அழிப்பதற்காகவே இந்தி மொழிக்கு ஆதரவாக பேசுகின்றார்கள் என்பதை ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒரு மொழி தாய் மொழியாக இருப்பதால் அனைத்து மாநில மக்களும் மற்ற மாநில மக்களுடன் தகவல்களை பறிமாறிக்கொள்ள இந்திய அலுவல் மொழியாக, பொது மொழியானஆங்கிலம் இருப்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை, இதனால் எந்த மாநிலமொழிக்கும் பாதகமும் இல்லை.
பொது மொழியாக ஆங்கிலம் இந்தியாவின் அலுவல் மொழியாக இருக்கும் நிலையில் இந்தியாவின் இரண்டாவது அலுவல் மொழி எதற்கு ?
இந்தியை ஆதரிக்கும் படித்த அறிவாளிகளிடம் இதற்கு பதில் இருக்கா ?
இந்தியை படிக்கக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை, எந்த மொழியை வேண்டுமானாலும் ஒருவர் படிக்கலாம், அதற்கு எந்தத் தடையும் இல்லை.ஆனால் என்னை ஆளும் மொழியாக வேற்று மாநில மொழி இருக்கக் கூடாது என்பதே இந்தி மொழி எதிர்பின் நோக்கம்.
மாநிலத்துக்கு ஒரு மொழி அலுவல் மொழியாக இருக்கும் நிலையில் இந்தியாவின் பொதுமொழியான ஆங்கிலம் மட்டுமே அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்பதுதான் தென் மாநில மக்களின் கோரிக்கை.
இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றால் அனைத்து மாநில மொழிகளையும் இந்தியாவின் அலுவல் மொழியாக அறிவிப்பது தான் இந்திய ஒற்றுமைக்கு நல்லது.
பல மாநில மொழிகள் இருக்க இந்தி மட்டும் இந்தியாவின் அலுவல் மொழியாக இருக்க கூடாது என்பதே மொழி புரட்சியின் நோக்கம்.
இந்தி இந்தியாவின் அலுவல் மொழி இல்லை என்று அறிவித்துவிட்டால் இந்தி பேசாத மாநில மக்கள் ஏன் இந்தி படிக்க வேண்டும் ?
இந்தியை நாம் ஏன் எதிர்க்கவேண்டும் ?
இந்தியை நாம் ஏன் படிக்க கூடாது ?என்பது மொழி அறிவு இல்லாதவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்கான சிறு முயற்சியே இந்த பதிவு.
தமிழர்களின் மொழி புரட்சியின் நோக்கம் தமிழர்களின் நலனுக்காக மட்டும் அல்ல அனைத்து மாநில மொழிகளுக்கும் சமமான தேசிய அந்தஸ்து கிடைக்க வேண்டுமென்ற ஜனநாயக உரிமை போராட்டம்.